தன்னிழப்பை யென்னகற்றுச் சாதிப்பான் சற்குருவாம்
மன்னுபெருஞ் சீய மதயானை – தன்னடைமேற்
சொற்பனத்தே தோன்றித் துடிப்பற்றுக் கேவலமாய்
நிற்பதுபோற் பாரா னெனின்.
(இ-ள்.) சற்குருவாம் மன்னு பெரும் சீயம் மதயானை தன் நடைமேல் சொற்பனத்தே தோன்றி – ஞானாசாரியனாகிய அருள் நிலை பெற்ற பெரிய சிங்கம் போல்வான் சீடனாகிய மதயானையினது மேலாம் பக்குவத்தால் பிரபஞ்சமாகிய சொப்பனத்தின்கண் தோன்றி,
துடிப்பு அற்றுக் கேவலமாய் நிற்பது போல்– மதம் பொழியாநின்ற யானையினது சொப்பனத்தின் கண் சிங்கந்தோன்ற அதனது மதகெர்விதம் யாவுங்கெட்டு மருட்கேவலப்பட்டு நின்றாற்போலச் சீடனாகிய யானையினது உட்புறனாய்ச் சீவியாநின்ற போதப்பதைப்பெல்லாம் அற்று அருட் கேவலமாய் நிற்கும்படி,
பாரான் எனின்- அப்போதத்திற்கும் உட்புறனாகிய கிருபாநோக்கஞ் செய்யானாயின்,
தன் இழப்பை என்ன கற்றுச் சாதிப்பான் ஒருவன் தற்போத ஒழிவைச் சாத்திரங்களைக் கற்று அவற்றுள் கூறியவாறே தனது போதத்தால் நிட்டைகூடி எங்ஙனஞ் சாதித்தடைவான்?
(வி-ரை.) போத ஒழிவின்கண் மெய்ப்பொருள் இருத்தலின், மெய்ப்பொருளைத் “தன்னிழப்பு” என்றார்.
மெய்ப்போதத்தாற் பொய்ப்போதம் அழிவதன்றி இதனை இதனாலழிக்கத் தொடங்கின் மேன்மேல் வளர்ச்சியாய் அழிவுகூடாமையின், “தன்னிழப்பை யென்ன கற்றுச் சாதிப்பான்” என்றார்.
யானையைச் சிங்கம் கொல்வதுபோல ஞானத்தால் அஞ்ஞானத்தைக் கெடுத்தலின், “சற்குருவா மன்னு பெருஞ்சீயம்” என்றும், ஞாதுரு ஞான ஞேயமாய இவைகள் ஒன்றுந் தோன்றாது ஆன்மா அப்பார்வையால் சிவத்தில் அதீதப்படுதலின், “கேவலமாய் நிற்பது போற் பாரானெனின்” என்றுங் கூறினார்.
“குருவாஞ்சியம்” என்றமையால், சீடனாம் யானை என்று வருவிக்கப்பட்டது. “துடிப்பற்றுக் கேவலமாய் நிற்பது போல் என்று உவமையாகக் கூறினமையால், ஈண்டும் யானையும் சிங்கமும் வருவிக்கப்பட்டன.
சிங்கம் போல்வான் பாரானாயின் எங்ஙனஞ் சாதிப்பானென முடிக்க.
நடை, பக்குவம், மேலாயபக்குவம் என மாறுக.
சீயம் பாரானெனின் என முடிந்தது, இராசசிங்கம் வந்தான் என்பது போலக்கொள்க.
இத்திருவெண்பாவால் அதிதீவிர பக்குவர்க்காயினும் ஞானாசாரியரால் அன்றிப்போதநாசங் கூடாதென்று கூறியவாறு காண்க.