பற்றாத போதும் பதறும் பழக்கமதைக்
கற்றாலென் னாகக் கலக்காது – சற்றேநீ
தீண்டிவிடிற்றான் காண்செனன மரணமது
மாண்டுவிடி னீசிவமா வை.
(இ-ள்.) பற்றாதபோதும் பதறும் பழக்கமதைக் கற்றால் என் ஆகக் கலக்காது- ஓர் பொருளையும் போதங்கருதாது அசைவற்றிருந்தபோதும் முன்னர் அசைந்த அப்போதத்தோடுங் கூடிய பழக்கத்தான் விரைந்தெழும் மனத்தைப் போதத்தால் பிடித்துச் சாதித்து அடக்குவன் எனின், உன்னை எங்ஙனம் மயங்கக் கலக்காது?
சற்றே நீ தீண்டிவிடின் தான் செனனமரணம் அது மாண்டு விடின் நீ சிவமாவை – நீ உன் போதத்தால் அம் மனத்தினைக் கணப்போதாயினும் பிடித்து விடுத்தி எனின், அது தானே பிறப்பும் இறப்பும் ஆம், அங்ஙனம் பிடித்து விடுக்கும் போதம் இறக்கும் உபாயம் அறிந்து இறத்தி எனின், அம்மனமும் இறக்கும் நீயும் சிவமாவை.
(வி-ரை.) பிடித்தபோது நினைப்பும் விடுத்தபோது மறப்பும் வருதலின், “செனனமரணம்” என்றார். காண் – அசை.
இவையிரண்டு திருவெண்பாவானும் தற்போதத்தால் மனத்தை அடக்கக் கூடாதென்று அறிவித்தவாறு காண்க.