ஒழுவிலொடுக்கம்

112. ஆகாயத் தேபலவுந் தோன்றி யடங்காதோ

ஆகாயத் தேபலவுந் தோன்றி யடங்காதோ
நீகாயத் தோடழுந்தி நீங்கியரு – ளாகாதோ
வென்று சலிப் பானே னெ திரற்ற பூரணத்தே
யொன்று மிலைகா ணுனக்கு.

(இ-ள்.) நீ காயத்தோடு அழுந்தி நீங்கி அருள் ஆகாதோ என்று சலிப்பான் ஏன்- நீ காயத்தோடு பொருந்தி இருப்பதாய்க் கருதி இக்காயம் நீங்கி எனக்கு ஓர் காலம் திருவருள் வடிவம் ஆகாதோ என்று சலித்துத்துயர் உறுவானேன்?

ஆகாயத்தே பலவும் தோன்றி அடங்காதோ எதிர் அற்ற பூரணத்தே உனக்கு ஒன்றும் இலை – ஆகாயத்தினிடமாய்ச் சர அசர தேகங்கள் பற்பலவும் தோன்றி நின்று அழியாவோ? அதுபோல், உன்போதம் ஓர் பொருளையும் எதிரிடாது அற்றபோது உன்னை விழுங்கிநின்ற அருட்பூரணத்தில் உனக்கு அத்தேகாதி பிரபஞ்சங்கள் ஒன்றும் இல்லை .

(வி-ரை.) ஆகாயத்தினிடமாய்த் தோன்றி ஒடுங்கும் காயங்கள் அவ்வாகாயத்திற்கு அந்நியமானதுபோல், முன் தேகாதிகளை யான் எனது என்று பற்றிநின்ற போதம் திருவருளில் அழுந்திப் பூரணமாய்ப் போகத் தேகாதி பிரபஞ்சங்கள் அந்நியமாய்த் தோற்றும் ஆகலின், “ஆகாயத்தே பலவுந் தோன்றி யடங்காதோ” என்றும், பொய்யாய்த் தோற்றலின், “ஒன்றுமிலைகாண்” என்றுங் கூறினார். காண் – அசை.

இத்திருவெண்பாவால் அருள் வடிவமாய் என்றைக்கிருப்பன் என்கிற மாணாக்கனுக்கு அவ்வருள் பூரணமென் றும், உன் சுட்டுப்போதம் அற்றால் அதனைவிட நீ ஒரு முதல் அன்று என்றும் அறிவித்து, அவனது துயரை மாற்றியவாறு காண்க.

அவன் யோகப்பழக்கம் நீங்கற் பொருட்டுப் பழக்க இலக்கணம் எடுத்து மேற்கூறுகின்றார்.