சுருதி குருவாக்குச் சுவாநுபவ மூன்றும்
சரியொத்த போதமுனைச் சார்வைத் – தெரிய
உரைத்த நூற் பேர்கே ளொழிவி லொடுக்கம்
விரித்த நூற் கெல்லாம் விதை .
(இ-ள்.) குருவாக்கு சுருதி சுவா நுபவம் மூன்றும் சரி ஒத்த போதமுனைச் சார்வை – ஞானாசாரியர் அருளிச்செய்த உபதேசமொழிகளும், இம்மொழிகள் மேல் ஐயம் பிறவாது இவற்றைத்தெளிவிக்கும் வேதாகமங்களும், இவ்விருவகை மொழிகளின் அருத்தப்படியே தம்முள் தோன்றுஞ் சுவாநுபவமும், ஆகிய மூவகையுஞ் சரியொத்த இடத்தில் தோன்றும் பேரறிவாகிய பதியையும், அவற்றான் இப்பதியை அறியும் பசுவையும், இப்பதியைப் பசுவிற்கு அறியவொட்டாது மறைத்து நின்ற பாசத்தையும்;
தெரிய உரைத்த நூல்பேர் கேள் ஒழிவிலொடுக்கம் விரித்த நூற்கு எல்லாம் விதை – உள்ளபடி விளங்கக்கூறிய இந்நூற்பெயரை, மாணாக்கனே ! நீ கேட்டி, ஒழிவிலொ டுக்கம் என்பதாம்; இம் முப்பொருளையும் பற்பலவாய் விரித்துக் கூறிய நூல்கட்கெலலாம் இஃது ஓர்வித்தாம்.
(வி-ரை.) குருமொழியே அமையும் எனினும் தீவிர தர பக்குவம் இன்றிய மற்றைய மூவர்க்கும் அதன்மேல் ஐயம் பிறக்கும் ஆகலின் சுருதி வேண்டிற்று; குருவும் சுருதியும் உண்டாய்ச்சுவாநுபவம் இன்றாயின் அது பரஞானமன்று. ஆகலின், இம்மூன்றுஞ் “சரியொத்தபோதம்” என்றார். இக்குறிப்பால் இந்நூலும் இம்மூன்றும் ஒத்துக் கூறிய தென்பது ஆயிற்று.
முப்பொருளினது இலக்கண விரிவையெல்லாம் சுருக்கித் தற்போத ஒழிவிற்கு உபாயமே விரித்துக் கூறலானும், போதவொழிவில் யாவுமொடுக்கிப் போதவிரிவில் யாவும் விரித்தலானும், இதனை “விரித்த நூற்கெல்லாம் விதை’ என்றார்.
இத்திருவெண்பாவால் நூற்பெயர் கூறியவாறு காண்க.