ஒழுவிலொடுக்கம்

16. ஆலிங் கனத்திலே யைந்தினையும் பாடுவோன்

ஆலிங் கனத்திலே யைந்தினையும் பாடுவோன்
மாலின்ப வாரி மறி திரைபோற் – காலப்பூக்
கிண்கிணிவாய்ச் செய்ததுபோற் கின்னரிப்பாட்டு ல்லாசம்
கொண்டவர்போற் கண்டவர்க் காகும்.

(இ-ள்.) ஆலிங்கனத்திலே ஐந்தினையும் பாடுவோன் மால் இன்ப வாரிமறி திரைபோல்-மாதர் கூட்டுரவிற் செய்யும் ஐவகை ஆலிங்கனத்தால் வரும் இன்பம் ஐந்தினையும் அநுபவித்தறிந்து ஒருவன் கூறிய பாட்டினைப் பாடும் ஓர் விடனுக்கு அக்கவி அருத்தத்தான் அவ்வின்பம் பெற்றான் போன்று உளத்தின்கண் அம்மயக்க இன்பவாரி எழுந்து அலை மறிவது போலும்;

காலப்பூக் கிண்கிணுவாய்ச் செய்தது போல் உதய காலத்துத் தாமரை அரும்பு கிண்கிணிவாய்ச் செய்து அலர்ந்தாற் போலும்; கின்னரிப்பாட்டு உல்லாசம் கொண்டவர்போல் கண்டவர்க்கு ஆகும் – மற்றொன்றினையுங் கேளாது ஒருவன் பாடும் கின்னரிப்பாட்டோசையையே உல்லாசமாய் உட்கொண்டவர்போலும் இந்நூலைக் கேட்டறிந்தோர்க்கே ஞானாநந்தம் உளதாம்.

(வி-ரை.) ஐந்தினையும் பாடுவோனுக்கு அதனைப் பாடுந்தோறும் அவ்வின்பம் பெற்றான் போன்று உளத்து இன்பம் மேன்மேலெழுதலின், “மறிதிரை” என்றார்.

அவனைப்போல் இந்நூல் கேட்குந்தோறும் இவர்க்கும் சிவாந்தம் பெற்றார்போன்று உள்ளத்தில் மேன்மேல் சந்தோஷம் தோன்ற வேண்டும் ஆகலின் “மாலின்பவாரி மறிதிரை போல்” என்றும், முகமலர்ச்சி தோன்றல்வேண்டும் ஆகலின், “காலப்பூக் கிண்கிணிவாய்ச் செய்தது போல் என்றும், மற்றொன்றையுங் கேளாது இதனையே கேட்க வேண்டும் ஆகலின், கின்னரிப்பாட்டுல்லாசங் கொண்டவர் போல்” என்றும் இங்ஙனம் உவமை கூறினார்.

ஆலிங்கன பரிசபேதத்தால் சுகமும் ஐந்து பேதப்பட்டதெனக் கொள்க. அஃது ஐந்தென்பது “ஆலிங்கன மைந்து மிதழ் பானம் பதினொன்றும்” என்னுங் காமநூலிற் காண்க.

இத்திருவெண்பாவால் இந்நூல் கேட்கும் இலக்கணங் கூறியவாறு காண்க.