ஒழுவிலொடுக்கம்

22. குன்றழலி னொந்து நீர் தேடுங் குருடரைப்போற்

குன்றழலி னொந்து நீர் தேடுங் குருடரைப்போற்
கன்றுபசு வைப்பார்க்குங் காலம்போ – லொன்றொன்றில்
வேட்டவதி மோகி விடயம் போற் சற்குருவைத்
தேட்டமதி பக்குவமாய்த் தேர்.

(இ-ள்.) குன்று அழலின் நொந்து நீர் தேடும் குருடரைப்போல் கன்று பசுவைப்பார்க்கும் காலம் போல் ஒன்று ஒன்றில் வேட்ட அதிமோகி விடயம் போல்- முதிர் வேனிற்காலத்து மலைக்கட்படும் தீவெப்பத்தால் மெய்வருந்தி நீர் எங்குளதென்று தேடும் அந்தகரைப்போலும், ஆவின்கன்று தன் தாயைத் தேடும் காலம் போலும், விடயங்கள் பலவற்றுள்ளும் ஓரோர் விடயத்தை நச்சியமிகுந்த அந்த விடயமோகிபோலும்,

சற்குருவைத் தேட்டம் அதிபக்குவம் ஆய்த்தேர்- ஞானாசாரியர் எங்குளர் என்று தேடும் தேட்டமே அதி தீவிரதர பக்குவம் என்று அறிதி.

(வி-ரை). அழலின் நொந்த குருடர் வெப்பத்துன்பந்தணிப்பான் நீர் தெரியாது தேடுமாறுபோல், மிகுந்த பக்குவர்க்குப் பிறவித்துன்பமாய்த் தோற்றலின், இத்துன் பந்துடைப்பான் ஆசாரியரைத் தெரியாது தேடலின், “நீர்தேடுங் குருடரைப்போல்” என்றும், கன்று காலை மாலையாகிய காலத்துத் தன்தாயை மிகுந்த அன்போடுந் தேடல்போல், முற்காலம்போல் அன்றி இக்காலத்தில் பிரபஞ்சம் பொய்யாய்த்தோற்றி மிகுந்த அன்போடு ஞானாசாரியரைத் தேடலின், “கன்று பசுவைப் பார்க்குங்காலம் போல்” என்றும், ஓர்விடயத்தை நச்சிய அதிமோகி அதனால் வரும் இன்பத்தைக் கருதிக்கருதி அவ்விடயம் என்று கிடைக்குமோ என்று அதனையே தேடல்போல், பேரின்பத்தைக் கருதிக்கருதி இதனைக் கொடுக்கும் ஞானாசாரியரை என்றைக்கு அடைவோம் என்று அவரையே தேடலான், “அதிமோகிவிடயம்போல்” என்றுங் கூறினார். விடயமோகிபோல் என்று கூட்டுக.

இத்திருவெண்பாவால் பக்குவ இலக்கணங் கூறிய வாறு காண்க.