தம்மா லறிந்ததெல்லாம் தாமல்ல வென்றுரைத்தாற்
சும்மா திருப்பதுவாய்த் தோன்றாதோ – விம்மி
யரிந்த தலை வாயடங்கு மவ்வளவே யல்லாற்
றெரிந்திடுமோ நீயே தெளி.
(இ-ள்.) தம்மால் அறிந்தது எல்லாம் தாம் அல்ல என்று உரைத்தால் சும்மா இருப்பது ஆய்த் தோன்றாதோ- தமது போதத்தால் ஈது ஈதென்று பகுத்தறிந்து நீங்கிய கருவிகள் எல்லாம் தாம் அல்ல என்று வேதாகமங்கள் கூறும் எனில், அவற்றைப் பகுத்தறிந்து நீங்கி நின்ற அறிவு தாமென அருளால் அறிந்து மௌனமாயிருப்பதாய்த் தோற்றாதோ? (ஆனால் தம்மை அறிந்த அநுபவஞ் சொல்வது எங்ஙனம் எனின்),
விம்மி –அரிந்த தலை வாய் அடங்கும் அவ்வளவே அல்லால் தெரிந்திடுமோ நீயே தெளி- உறுப்புக்கட்கெல்லாம் முதலாய தலையை அரிந்தபோது அவ்வாய் திறந்தடங்கும் அவ்வளவே அன்றித் தலைபோயிற்றென்று கூற அறியாது. அதுபோலும், கருவிகள் முப்பத்தாறையும் நீங்கி அவற்றின் மேல் நின்ற முத்திச்சகலமும் முத்திக்கேவலமும் நீங்கி ஆன்மா அருளால் தம்மை மாத்திரம் அறிந்திருக்குமிடத்து ஆண்டு வேறோர் அநுபவம் தெரிந்திடுமோ? நீயே இதனைத் தெளிந்தறிதி.
(வி-ரை.) தத்துவங்கண் முடிவில் தோன்றும் முத்திச்சகலம் முத்திக்கேவலம் இன்மையால், “அரிந்ததலை” என்றும், இங்ஙனம் நின்ற அறிவுக்கு வடிவு இன்மையால் சொல்லக்கூடாது ஆகலின், “வாயடங்கும்” என்றும் கூறினார். தத்துவங்களை அங்கமாயும் முத்திச் சகலகேவலங்களைத் தலையாயும் வைத்து, இத்தலைபோயவிடத்து ஆன்மாவுக்கு அவ்வநுபவங்கள் ஒன்றும் இன்றிச் சும்மா இருத்
தலின், ‘அரிந்ததலை வாயடங்கு மவ்வளவே யன்றித் தெரிந்திடுமோ நீயே தெளி” என்றார். அரிந்ததலை விம்மி யடங்குமெனக் கூட்டுக.