குட்டித் திரட்கரடி யாறொழுகக் கோன் குதித்துக்
கட்டிப் புதைந்த கதையாகும் – துட்டமலப்
பித்திலே மூத்தவர்கள் பேய்பிதற்றாம் பேதையர்க்குப்
புத்திபோற் காட்டும் பொருள்.
(இ-ள்.) துட்ட மலப்பித்திலே மூத்தவர்கள் பேய் பிதற்று ஆம் பேதையர்க்குப் புத்திபோல் காட்டும் பொருள்- கொடிதாகிய மும்மலப் பைத்தியத்தால் முதிர்ந்த ஆசாரியரல்லார், ஓர்காற் கூறியது ஓர்காற் கூறாது பேய்பிடித்தாற்போலும் பிதற்றா நின்ற அபக்குவர்க்கு உபதேசம் போலுங் கூறிய அருத்தம்,
குட்டித் திரட் கரடி ஆறொழுகக் கோன் குதித்துக் கட்டிப் புதைந்த கதை ஆகும் – பல குட்டிகளோடுங் கரடியானது நதிவெள்ளத்தோடுஞ் செல்ல, அதனது கரைக்கண் நின்ற ஓரிடையன் அதனை ஆடெனக்கருதி அந்நீரில் குதித்து அதனைப்பற்ற, அதுவும் இவனைப்பற்ற, அதுவும் இவனும் அவ்வெள்ளத்து ஆழ்ந்தனரென்று உலகத்தார் கூறுங் கதைபோல ஆகும்.
(வி-ரை.) பரஞானம் என்பது சிறிதும் இல்லாதார் அபரஞானங்களைக் கற்றுக்கொண்டு, மனைவி முதலிய குடும்ப வெள்ளத்தில் ஆழ்ந்து கிடக்கின்றபேர் சிலர் இடம்ப நிமித்தங் கேட்க, அவர்க்கு அருத்த நிமித்தம் உபதேசிக்க, அந்த உபதேசப்பொருளால் இருவருக்குந்தோஷ மேலிட்டுப் பிறவிச்சாகரத்து ஆழ்வர் ஆகலின், அக்கதையை இப்பொருளுக்கு உவமையாகக் கூறினார்.
இடையன் கரடியை ஆடென்றும், கரடி அவனை நதி கடத்தும் புணையென்றும் கருதினதுபோல, அபக்குவனைப் பக்குவனென்றும், அநாசாரியனை ஆசாரியனென்றும் இருவருமாறுபாடாகக் கருதினார் என்பதுமாம்.
இத்திருவெண்பாவால் அநாசாரியனுக்கும் அவனிடத்து உபதேசங்கேட்ட அபக்குவனுக்கும் குற்றம் வருமென்று அறிவித்தவாறு காண்க.