ஒழுவிலொடுக்கம்

70. மயலற்றார் கேட்க மகிழ்ந்துரைத்த வார்த்தை

மயலற்றார் கேட்க மகிழ்ந்துரைத்த வார்த்தை
அயலுக் குபதேச மாகுந் – துயிலாத்
தொறுவனைப்போ னின்றுகே டூசழுக்கு நோயு
மறுமுரைத்தோ நாமுரைப்ப தை.

(இ-ள்.) மயல் அற்றார் கேட்க மகிழ்ந்து உரைத்த வார்த்தை அயலுக்கு உபதேசம் ஆகும் – தேகாதி பிரபஞ்சங்களை யான் எனது என்று கருதும் மயக்கம் அற்ற அதிபக்குவத்தார் கேட்க ஞானாசாரியர் ஆநந்த மகிழ்ச்சியால் அருளிச்செய்த உபதேசமொழிகள் அப்பக்குவர்க்கு அன்றி அயலில் இருந்தோர்க்கும் உபதேசமாகும்; (ஆகலின் அம் மொழிகளை),

துயிலாத் தொறுவனைப்போல் நின்றுகேள் தூசு அழுக்கு நோயும் அறும் நாம் உரைப்பதை உரைத்தோம்- சாக்கிரத்தில் நில்லாது சொப்பனத்துஞ்செல்லாது இடையான தன்மையாய்த் துயின்றும் துயிலாத இடையனைப்போன்று கேவல சகலங்களில் தாக்கற்று நின்று கேட்டி, இங்ஙனங் கேட்டி எனின், தூசின் மேல் ஏறும் அழுக்குப்போன்று ஏறுவதாய ஆகாமிய துன்பமும் ஒழியும், யாம் உனக்குச் சொல்லவேண்டிய புத்தியைச் சொன்னோம் , (இதனை நீ அறிதி).

(வி-ரை.) இடையன் கோற்கண் துயிலாது துயின்று மாட்டுமணி அரவத்தைக் கேளாது கேட்கும் முறைமை போல், இப்போது ஞானோபதேசம் கேட்கும் போதே சகல கேவலங்கள் தாக்காது கேட்போன் அநுபவமுற்றும் பெற்று முன்னிலைச்சுட்டும் ஒழிந்து நிற்பன் ஆகலின், “தூசழுக்கு நோயுமறும்” என்றார்.

தூசழுக்கு நோயுமறும் என்ற உம்மையால் சஞ்சித பிராரத்தமும் அறும் என்பதாயிற்று. அஃது எங்ஙனம் எனில், கருவிகள் சடமாகலின் அவைகள் ஆன்மாவை அறிந்து கூடமாட்டா, ஆன்மா கேவலத்தில் மறைபட்டுக் கிடத்தலின் அவைகளைச் சென்று கூடமாட்டா.

கருவிகளைப் பிரேரகம்பண்ணி இக்கேவல மறைப்பை நீக்கிச் சகலத்தில் வைத்துப் பெத்தத்தில் தேகாதி பிரபஞ்சங்களை அறிவிப்பது போலவும்,

கீழாலவத்தைப்படுத்திக் கேவலத்தில் வைப்பது போலவும், முத்தியில் இக்கேவல சகலங்கள் தாக்காது வைத்துச் சுத்தாவத்தையிற் செலுத்திச் சுத்தத்தில் வைப்பதும் திருவருளே என்றும், இஃதன்றிக் கருவிகளைக் கூட்டுவித்தபோது ஆன்மாவிற்குச் சுதந்திர அறிவு தோன்றித் தான் அல்லாத தேகத்கைத் தானெனக் கருதி நின்று யானே எல்லாவற்றையும் அறிவேன், எல்லாவற்றையுஞ் செய்து முடிப்பேன், எனக்கு எதிரொருவரும் இன்றென நிற்கும், இங்கனம் நிற்பதனால் இதாகிதங்களும் இவற்றான் வரும் இருவினைகளும் தொடரும், இத்தொடர்ச்சியால் அளவிறந்த பிறவிகளில் நெடுங்காலம் சுழல்வது இங்ஙனம் என்று அந்தப்புல்லறிவைவிட்டு நீங்கி, கானலை நீரென்று மயங்கிக் கண்டபோதும், நீரை நீரென்று உள்ளபடி கண்டபோதும் தனக்குக்காட்டி நின்றது கதிரொளி என்று கண்கண்டு நின்றாற்போல், ஆன்மா பொய்யை மெய்யென்று மயங்கிநின்று அறிந்தபோதும், மெய்யை மெய்யென்று தெளிந்துநின்று அறிந்தபோதும், திரோபவித்தும் அநுக்கிரகித்தும் அறிவித்து நின்றதும் திருவருளே என்றும் உள்ளபடி அறியில் தானென்பதும், இந்த முறையே அவன் அவள் அது என்னும் முன்னிலைக்கண்ணும் திருவருள் நடப்பிக்கின்றது என்று கண்டு அம்முன்னிலைகளால் தனக்கோர் இதாகிதங்கள் வந்தகாலை அம்முன்னிலைகளை நாடாது வினைக்கீடாய்த் திருவருள் நடப்பிக்கின்றதென்று அத்திருவருளை நாடி நிற்றலான் பிறரென்பதும் போய், எங்கும் திருவருளாய்க் காண்டலால் ஆகாமியம் அறும் என்பதும், ஞானாசிரியர் கிருபாநோக்கத்தால் சஞ்சிதம் அறும் என்பதும் உண்மை .

முற்சனனம் புரிந்த வல்வினை உடலுடன் அகலும் என்றும், வினைப்போகமே யுறுந் தேகங்கண்டாய் வினை தானெழிந்தால், தினைப்போ தளவு நில்லாது கண்டாய் என்றும் இங்ஙனம் ஈசுவரவாக்கியம் ஞானிகள் வாக்கியங்கள் இருக்க, நீர் பிராரத்தவினையும் போம் என்றது என்னை எனின், ஈண்டுக் கூறிய முறையே நின்று யான் பிறர் என்பது ஒழிந்து திருவருளே கண்ணாகச்சென்று சிவதரிசனம் பண்ணி அதில் அதீதப்பட்டு நின்ற சிவயோகி பஞ்சகிருத்தியங்களையுங்கடந்து பரமுத்தனைப்போல் இருப்பன். ஆகலினும் அவன் பிராரத்தம் வருவது போல் தோன்றி அழிவதே அன்றி அவனை வாதியாது ஆகலினும், அவனுக்குப் பிராரத்தம் இன்றென்பதறிக. இன்னும் அப்பர் மாணிக்கவாசகர் முதலாயினோர் சரித்திரங்களினாலுங் காண்க.

யான் பிறர் என்பதனால் வினை ஏறும் என்பது,

தானலாதொன்று தன்னைத்தானெனக் கருதிக்கொண்டே

யானெலாஞ் செய்தேனென்னு ஞானமஞ் ஞான மத்தா

லீனமாம் வினையி ரண்டா மிருவினை யாலு டம்பா

மூனமா ருடம்பா லூழா மூழினாலாகா துண்டோ

என்னுந் திரட்டானும்.

யான் செய்தேன் பிறர் செய்தா ரென்ன தியா னென்னு

மிக்கோணை ஞானவெரியால் வெதுப்பி நிமிர்த்துத்

தான் செவ்வே நின்றிடவத் தத்துவன்றா னேரே

தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட்டோடும்

நான் செய்தே னெனுமவர்க்குத் தானங் கின்றி

நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம்

ஊன்செய்யா ஞானந்தா னு திப்பினல்லா

லொருவருக்கும் யானென திங் கொழியா தன்றே”

என்னும் சித்தியாரானும்.

யான் செய்தேன் பிறர் செய்தா ரெனுங்கோணீங்கி என்னும் சிவஞான தீபத்தானும் மற்றும் வருவனவற் றானுங் காண்க.

பிராரத்தம் இன்றென்பதனை,

மும்மை தரும் வினைகண் மூளாவா மூதறிவார்க்

கம்மையு மிம்மையே யாம் “ என்னும் திருவருட்பயனாற் காண்க.

இத்திருவெண்பாவால் ஆசாரியர் உபதேசங்கூறுமிடத்து மாணாக்கன் சகல கேவலங்களில் தாக்கற்று நின்று கேட்பின் மூவகை வினைகளும் அறுமென்று அறிவித்தவாறு காண்க.