ஒழுவிலொடுக்கம்

75. தேட்டந் திரண்ட திருமேனி யுட்புறம்பாய்க்

தேட்டந் திரண்ட திருமேனி யுட்புறம்பாய்க்
காட்டு மளவே கரைபுரண்டு – கேட்ட
வதிபக் குவத்தார்க் ககம்புறமென்றாறு
விதிவைத்த தீக்கையா மெண்.

(இ-ள்.) தேட்டம் திரண்ட திருமேனி உள் புறம்பு ஆய் காட்டும் அளவே- தமது உயிருள் இருந்தும் தெரியாது தாம் தேடும் தேட்டமாகிய பேராநந்தந்தானே திரண்ட ஞானாசாரியர் தமது திருமேனியை அவர் கண்ணாரக் காணும்படி புறம்பாய்க் காட்டு மாத்திரத்திலே,

கரைபுரண்டு கேட்ட அதிபக்குவத்தார்க்கு அகம் புறம் என்று ஆறு விதிவைத்த தீக்கை ஆம் எண்- அன்பென்னும் ஆறு கரைபுரண்டெழுந்து உந்த அவ்ஆசாரியரைப் பலதரம் வலம்வந்து அட்டாங்க முதலிய வணக்கஞ் செய்து பின்னெழுந்து அஞ்சலியத்தராய் நின்று ஆநந்தக் கண்ணீர் ஒழுக அநேக தோத்திரம்பண்ணி, எமது சவாமிகளே!

அடியேங்கட்கு இவ்வுடல் வந்தவாறு யாது? இவற்றுள் இருந்த யாம் ஆர்? எமக்கு முதலாயுள்ள மெய்ப்பொருள் யாது? என்று கேட்ட அதிபக்குவ முடையோர்க்கு வேதாகமங்களில் விதித்துவைத்தபடி அவர் பண்ணுந்தீக்கை அகத்தீக்கை மூன்று புறத்தீக்கை மூன்று என்று ஆறு வகையாயிருக்கும் என்று அறிதி.

(வி-ரை.) தீக்கைகள் ஆறாவன திருநோக்கம், பரிசம், வாக்கு, பாவனை, நூல், யோகம் என்பன; இவற்றுள் திருநோக்கம், பாவனை, யோகம் என்னும் இம்மூன்றும் அகத்தீக்கை, பரிசம், வாக்கு, நூல் என்னும் இம்மூன்றும் புறத்தீக்கை எனக் கொள்க. உள்ளென்பதை உயிருள்ளிருந்தும் எனக் கொள்க.

இத்திருவெண்பாவால் ஞானாசாரியர் தமக்கு எதிரே எழுந்தருளிய போது பக்குவர் வணங்கி வினாவு முறைமையும், இவர்க்கு அவர் பண்ணுந்தீக்கை இவை என்பதும் அறிவித்தவாறு காண்க.