ஒழுவிலொடுக்கம்

93. அட்டமா சித்திகளு மத்துவா மூர்த்திகளுங்

அட்டமா சித்திகளு மத்துவா மூர்த்திகளுங்
கிட்டிலதற் கங்கங்கே கீழ்மேலாய் – விட்டு
வரும்போதுந் துக்கமாய் வந்து வந்து மாய்ந்து
பெரும்பாவஞ் செய்யப் பெறும்.

(இ-ள்.) அட்டமாசித்திகளும் அத்துவா மூர்த்திகளும் கிட்டில் -அக்கிரியா யோகத்தால் அணிமா முதலிய அட்டமா சித்திகளும் தமக்குக் கைவல்லியமாகக் கிடைப்பினும், விநாயகன் முதலிய ஆறு அத்துவா மூர்த்திகளையும் சடாதாரங்களில் வழுவறத் தியானிக்கக் கிடைப்பினும்,

அதற்கு அங்கு அங்கே கீழ்மேல் ஆய்விட்டு வரும் போதும் துக்கம் ஆய் வந்துவந்து மாய்ந்து பெரும்பாவம் செய்யப்பெறும் — அச்சித்திகளால் எடுக்கும் உருவுகளுள் ஒருருவிற்கு ஒருருவு தாழ்ந்தும் உயர்ந்தும் தோற்ற அவ் வுருவுகளை ஆங்காங்கு விடுத்து வரும்போது துக்கமாயும், மூர்த்திகளை ஆறாதாரங்களினும் வெவ்வேறாய் ஆங்காங்குக் கீழுமேலுமாய்த் தியானித்து விடுத்து வரும்போதும் துக்கமாய், அவ்வுருவெடுக்கும்போதும் அதனை விடுக்கும்போதும் அம்மூர்த்திகளைத் தியானிக்கும் போதும் விடுக்கும்போதும் பிறந்து பிறந்து இறந்து இறந்து இவற்றால் மிகுந்த பாவங்கள் செய்யப்படும்.

(வி-ரை.) சித்தியால் ஒருருவை மறைத்து ஒருருவைக் காட்டலும், தியானத்தால் ஓராதாரம் விடுத்து ஓராதாரஞ் சேறலும், ஓர் பிறவியை நீங்கி ஓர் பிறவியை எய்தலும், ஓரவத்தையை நீங்கி ஓரவத்தையை எய்தலும் போல் இருத் தலின், “வந்து வந்து மாய்ந்து” என்றும், சித்தியால் சாபாநுக்கிரகம் உளவாகலின் முனிவு பிறந்தபோது பிறரைச் சபித்தலானும், தம்மைப் படைத்தழிக்கும் மூர்த்தியைத் தாம்படைத்து அழித்தலானும், பாவம் வருதலின், “பெரும் பாவஞ் செய்யப்பெறும்” என்றுங் கூறினார்.

“வரும்போதும் துக்கம்” என்பதனை ஆக்ஞாசக்கர மளவுஞ்சென்று மீண்டுவரும்போதும் எனக்கொள்க. சகமுகத்தில் செய்யும் தொழில் போன்று அகமுகத்துஞ் செய்தலால் துக்கம் என்றார்.

அட்டமாசித்திகளாவன: அணிமா, இலகிமா, கரிமா, மகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய இவை எண்வகையும் எனக்கொள்க.

அதற்கென்னும் நான்கனுருபை அதனாலென்று மூன்றனுருபாகக் கொள்க.