கவிப்பயனு மாதனமுங் கண்சிமிட்டா நோக்குந்
தவப்பகடி யாட்டங்காண் சார்வைத் – தவிர்க்கின்
மறந்தறிய லாகா மலட்டறிவாய் வான்போ
னிறைந்து துளும்பாம னில்.
(இ-ள்.) கவிப்பயனும் ஆதனமும் கண் சிமிட்டா நோக்கும் தவப்பகடி ஆட்டம் சார்வைத் தவிர்க்கின்– யோக நூலைக் கற்றுக்கொண்டு பிறர்க்கு அதன் அருத்தங் கூறுதலும், பதுமாதன முதலிய ஆதனங்கட்டலும், மனத்தை ஓர் தானத்தில் நிறுத்தி இமையா நாட்டமாய்ப் பார்த்திருத்தலும், இவை முதலிய நீ செய்யும் தொழில்கள் ஞான தபோதனர் முன்னர்த் தவப்பகடிக் கூத்துக்கட்டி ஆடுவதாம்; இனி இவ்யோக வாதனையை நீங்குதி எனின் நேரே வீடடைதற்கு ஓர் உபாயமுண்டு, (அஃது எங்ஙனம் எனின்),
மறந்து அறியல் ஆகா மலட்டறிவு ஆய்வான் போல் நிறைந்து துளும்பாமல் நில்– யோகசமாதி கூடும்போது ஓர்கால் நினைந்தும் ஓர்கால் மறந்தும் முன்னர் அறிந்தது போல் அறியாது, இப்போது அந்நினைப்பு மறப்பு முதலிய ஒன்றும் தோன்றாத அறிவாய் எங்கும் பூரணமாய் ஒன்றோடும் தாக்கற்று அசைவற்றிருந்த ஆகாயம்போல் நீயும் எங்கும் பூரணமாய் ஒன்றோடும் தாக்கற்று அசைவற்று நிற்றி,
(வி-ரை.) “கண்சிமிட்டா நோக்கும்” என்றது, நாசி நுனி புருவமத்தியங்களில் பார்த்துக்கொண்டிருத்தல்
நல்ல கூத்தாடுவான் முன்னர் அவன் வேடம் தானும் போட்டுக்கொண்டு அக்கூத்திற்கு மாறாய அகசியக்கூத்து ஆடுவானைப்போல, ஞானிகளைப்போலும் வேடமும் நடையும் காட்டி, அவரது பூரண அறிவுக்கு மாறாகக் கிஞ்சிக்ய அறிவனாயிருத்தலின், தவப்பகடியாட்டம் என்றார்.
மலட்டறிவு – ஒன்றுங் கலவாத அறிவு. காண்-அசை,
இத்திருவெண்பாவால் கேவல சகலங்கள் தாக்காது அருள் வடிவாய் நிற்றற்கு உபாயங் கூறியவாறு காண்க.
இங்ஙனம் இருவருக்கும் சமாதி கூடுதல் சரியெனின் யோகியை ஞானிகள் இகழ்ந்து கூறுவது என்னை எனின், மேற்கூறுகின்றார்.