நெய்யி னிழற்போ னிழலிற் புருடனைப்போற்
பொய்யில் விகற்பம் புகுவதுவுந் – துய்ய
வொளியோசை யாகி யொடுங்குவதுந் தம்மைத்
தெளியாதார் செய்யுஞ் செயல்.
(இ-ள்.) நெய்யில் நிழல் போல் நிழலில் புருடனைப் போல் பொய்யில் விகற்பம் புகுவதும்- நெய்யின் கண் தோற்றும் நிழலைப்போலும், அந்நிழலைப்பார்த்து ஆகாயத்தைப் பார்க்கில் அந்நிழல்போல் தோற்றும் சாயா புருடனைப்போலும், கருவிகளாகிய பொய்யிற் கூடிய தற்போத விகற்பத்தால் தாமும் தம்மால் தியானிக்கப்பட்ட மூர்த்தி களுமாய் ஆறாதாரங்களில் தோற்றுவது,
துய்ய ஒளி ஓசை ஆகி ஒடுங்குவதும் தம்மைத் தெளியாதார் செய்யும் செயல் – நிருமலமாகிய விந்து தரிசனமும் நாத தரிசனமுமாய்த்தோற்றி, அங்ஙனம் தோற்றியவாறே நில்லாது, மீட்டும் ஒடுங்குவதும் ஆகிய இச்செயல்கள் எல்லாம் தம்மை அருளால் தெளிந்து அறியாதார் செய்யும் செயல்களாம்.
(வி-ரை.) நெய்போல் கருவிகள்; அதில் தோற்றும் நிழலும், அந் நிழல்போல் ஆகாயத்தில் தோற்றும் சாயா புருடனும் போல் தாமும், தம்மால் தியானிக்கப்படும் மூர்த்தியும் என்பதறிக.
விந்து நாத தரிசனம் மாயையுள் தோற்றுவது ஆகலின், அது பொருளன்று என்பதுங் காண்க.