ஒழுவிலொடுக்கம்

99. உபதேசப் பித்தோ வுபமானப் பித்தோ

உபதேசப் பித்தோ வுபமானப் பித்தோ
விபரீத மோபழக்கோ வேறோ – தபசி நீ
கண்மூடா விண்மூடத் தேடுங் கவுசனை போ
லெண்மூடா யோகமிது வென்.

இ-ள். உபதேசப் பித்தோ உபமானப் பித்தோ விபரீதமோ பழக்கோ வேறோ தபசி நீ-உனக்குக் குரு சொன்ன உபதேசப் பித்தமோ? சாத்திரங் கூறிய உபமானப் பித்தமோ? உனது விபரீத புத்திதானோ? முற்சனனங்களில் தொன்று தொட்டு நீ செய்து வந்த பழக்கந்தானோ? அஃதன்றிப் பிறர் செய்வது கண்டு பாவனையாகச் செய்தல் முதலிய மற்றுயாதோ? தவவேடம் பூண்டு தவத்தைப்பண்ணாநின்ற நீ, (அத்தவத்திற்கு உரிய ஞானயோகம் புரியாது).

கண்மூடா விண் மூடத்தோடும் கவுசனைபோல் எண் மூடா யோகம் இது என் – விண்ணை மூடவேண்டினோன் அதனை நாடுங்கண்ணை மூடாது வைத்து, அவ்விண்ணை மூடுதற்குக் கவுசனை தேடுதல் போன்று, எண்ணாநின்ற மூடனே! பஞ்ச பூதாதி கருவிகளை  ஒழிக்கத்தொடங்கிய  நீ அவற்றை நாடும் தற்போதத்தைக் கண்ணுக்கு இமை போல் உனது உயிரை விட்டு நீங்காதிருந்த அருளில் மறைந்து அடக்காது, இத் தற்போதத்தால் அப்பஞ்சபூதாதி கருவிகளை ஒழிப்பல் என்று கருதிப் பிராணவாயுவை உள் மறித்து, இதனோடும் போராடி நீ செய்யும் யோகம் இதென்னை கொல்?

(வி-ரை.) அருளில் மறைந்து அசைந்தோனுக்கு அவ்வருளே தோன்றும், கருவியில் மறைந்து அசைந்தோனுக்கு அக்கருவியே தோன்றும்; ஆகலின், அவ்யோகத்திற்கும் இவ் யோகத்திற்கும் பேதம் இவ்வநுபவத்தானுங் காண்க.

ஓகாரம் அடுக்கி வந்து இது என் என முடிந்தது.