ஒழுவிலொடுக்கம்

வள்ளன்மலர்த்தாள்

வள்ளன் மலர்த்தாள் என்னும் ஒருவகை வனப்பு, இருவகைச்சந்தி, மூவகைமொழித்தொகைச் சொற்றொடர்க்கண், வள்ளலென்னுங் குணிப்பெயர் வினைமுதற்றொழிற் பயனுறப்படுமுடைமைக் குணப்பெயராய் நின்று, பிள்ளையாரது திருவடிகள் தம்மையடைந்தோர்க்கு, வரையாது ஆனந்தப் பேற்றையளித்து, அவரைத் தாங்கிக் கோடலைக் குறித்த தென்றுணர்க.

அஃதேல், ஆனந்தப்பேற்றைத் தருதற்குந் தாங்கிக்கோடற்குங் கருத்தர் பிள்ளையாரன்றோ? அங்ஙனம் இருப்பத்திருவடிகட்கு இங்ஙனங்கூறல் எங்ஙனமெனில் : திருவடிகள் தம்மை வழிபடுவோர்க்கு இரங்கி இன்ப ஈதற்பொருட்டு எழுந்தருளும் பிள்ளையாரது படர்ச்சி நிகழ்ச்சிக்கருவியாய் நின்று அவரை அவ்வழிபடுவோர்பால் வருவித்தலானும், ஞானதீக்கை பண்ணுங்கால் அவர் சென்னியிற் சூட்டப்பட்டு ஐக்கியம் வருவித்தலானும், நித்தியானந்தப் பேறு வாய்க்கு மாகலின் இங்ஙனமென்க.

அல்லாதூஉம், வாட்டமிலருளுங், கோட்டமில் குணனும், அசையாநிலையும், நசையாமனனும், வெகுளாப்பண்பும், விடாப்பேரன்புஞ், செவ்வியின் மரீஇ எவ்வெவர் எவ்வகை வேட்டனர் அவ்வகை விருப்பொடு குறிப்பின் வரையாதீதல் வள்ளற்றன்மை என்பவாகலின், இவ்வள்ளற்றன்மையைத் தம்பால் அடைந்தோரிடை அடைவித் தருளுங் கருணைபற்றி அங்ஙனங் கூறிய தெனினும் அமையுமென்க.

அஃதேல் வள்ளற்றன்மை வழங்கும் மலர்போலுந் திருவடி யென்றன்றோ உரை விரித்தல் வேண்டும்.

அங்ஙனமின்றி வள்ளற்றன்மையுடைய மலர் போலுந்தாளென விரித்திருக்கின்றதே யெனின் ; அங்ஙனம் அடைவித்தலும் வள்ளற் றன்மையே யாகலினும்  உடையதொன்றன்றே  உதவப்படுமாகலினும் இங்ஙனம் விரித்தல் அங்ஙனங் கூறற்கும் அமைதியாமென்க.

அல்லாதூஉம், அருளின்றி யமையாத வள்ளற்றன்மைக்கு அவ்வருளே முதற்காரணமா மாகலின், ஆனந்தவடிவராகிய பிள்ளையார் அவ்வானந்தப் பேற்றை யளிக்கும் வள்ளற்றன்மைக்கு முதற்காரணமாகிய திருவருட் சத்தியே திருவடியென்று குறித்தற்குக் காரணத்தைக் காரியமாக ஈண்டு உபசரித்த தெனினும் அமையுமென்க.

அல்லதூஉம், எமது திருவடிகளை வழிபடின் வீட்டின்பமெளிதில் தருவேமென்று பிள்ளையார் விதித்தருளிய அருள் விதிப்படியறிந்து வழிபடின்,அவ்வழிபாட்டான் அவ்வீட்டின்பந் தரப்பெறுதல் உண்மையாகலின், அவ்வுண்மை நோக்கி ஈண்டு கூறிய தெனினும், பிள்ளையார் திருமேனி முற்றுந் தெய்வத்தன்மை பூரணமாகலின் அதனை யறிவிக்க ஈண்டு கூறியதெனினு மமையுமென்க.

திருவடிகட்கு அடையாய வள்ளலென்பதூஉம், ஆசிரியர் பெயராய வள்ளலென்பதூஉம், அடியிணை எதுகைத் தொடையாய் எழுத்தசை சீரொலி பொருளாதிகளான் ஒற்றுமைக்கொண்டு நின்று பிள்ளையாரது திருவடித்தீக்கைக்கும் ஆசிரியரதிபக்குவத் தன்மைக்கும் உள்ள வொற்றுமைப் பொருத்தம் விளக்கின வென்க.

வள்ளல் என்பது, பிள்ளையார்க்குக் காரணச்சிறப்புப் பெயராகக்கொண்டு பொருள் கூறுவாறும் உளர். அங்ஙனங்கூறின், இத்துணைச் சிறப்பின்று என்று மறுக்க.  என்னெனின் – அவயவச்சிறப்பான் அவயவிக்குணம் வெளிப்படுத்தலே பெரும்பாலும் இன்பமாகலினென்க! இதனைப் “போற்றிமானான் முகனுங் காணாத புண்டரிகம் என்பதனாற் காண்கவென்க. வள்ளமலர்த்தாள் எனப்பாடமோதி வள்ளம்போலுங் குவிந்த வாய்மலரென மலர்க்கடையாக வுரைவிரிப்பாருமுளர். அங்ஙனம் விரித்தல் இத்துணைப் பெரும் பயனின்றென மறுக்க. இங்கன மின்னும் விரிக்கிற் பெருகுமென்க.

மலர் என்பது, வள்ளற்றன்மையின் அருகு வைத்தமையின், ஈண்டு நிறைதலுங், குறைதலுமாயுள்ள நீர்நிலைக்கண் தோன்றியும், அழிந்தும், விரிந்துங், குவிந்தும், வாடியும் நின்று, – வண்ணமும், நறையும், வாசமுஞ், சிறிதே சிறுபோது கொண்டு பறித்தலாதிய சிறு தொழிற்படு மலர்களை நீக்கி, ஆண்டு திரிபிலாத் தெய்வத் தெண்ணீர் நிலைக்கண், ஒழியா மலர்ச்சியும், அழியா மணமும், பொன்னிறப்பொலிவும், இன்னற வொழுக்கும், மென்மையுந், தன்மையும், வியப்புறுமுருவுங், கண்டோர் கண்கவர் காட்சியும், மாட்சியும் கொண்டு, முக்காலமுங் குன்றா மலரைக் குறித்தமை காண்க.

என்னெனிற் – பிள்ளையார் திருவடிகள், மெய்ஞ்ஞான விளக்கமாய், அருண்மணம் வீசிப், பொன்னிறம் பொலிந்து, ஆனந்தமொழுக்கி, மெல்லென வுற்றுத் தண்ணெனக் குளிர்ந்து, தரிசிக்கின்றோர் வியப்புறு முருவாய் அவரது விருப்ப நோக்கம் பரவ என்றும் ஒரு தன்மையவாய் இருக்கின்றமையின் என்க. ஆயின் மலர்போலுந்தாளென்று உவமை விரிந்தபடி நிற்றற்கு இடங்கொடாது மலர்த்தாளென்றது என்னெனின், – அத்தெய்வத் திருமலர் தனைக் கண்டோர்க்குச் சிறிய விடயானந்தந் தருதலேயன்றித் திருவடிபோற் சிவானந்தம் தரமாட்டாச் சிறுமை நோக்கியென்க.

 அல்லதூஉம், சுபவடிவாய், எவ்வகைச் சுபங்கட்கு முன்னின்ற தனை விளங்குறச் செய்வதாய், மகிழ்வுடையோர் யாரும் மேற்கொண்டணியப்படுவதாய், நிற்கு நன்மலர் போலுமெனக்கூறினும் அமையும் ; என்னெனின், – திருவடிகள் அருள்வடிவாய், ஆனந்தப் பேற்றிற்கு முன்னின்றளிப்பதாய், அறிவுடையோர் தந்தலைமேற் கொண்டணியப் படுவதாய் நிற்றலினென்க.

அல்லதூஉம், மலரையடைந்த வண்டுகள் அதனது தேனுண்டு களிகொள்ளுதல் போற்றிருவடிகளை யடைந்தோரும் அருளானந்தம் பெற்று இறுமாத்தலின் இங்கனங்கூறியதெனினும் அமையுமென்க.

இதனைத் தொகையுவமை யணியாகக்கொண்டு பொருள் கூறு வாருமுளர். அவர் கூறுங் கூற்றிற் பெருபயனின்றென மறுக்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகுமென்க.

தாள் என்பது அடிகட்கன்றியும் முயலுதற்கும் உண்ணின்ற பொருள் வெளிப்படாமைக்கும் அதனை வெளிநின்றோர் உட்சென்று கவரப் படாமைக்குங் காப்பாகக் காப்பினிற்குங் கருவிக்கும் அணிதற்கு அணியின் இருகடையுமிணைத்து நிற்கும் இடைப்பூட்டிற்கும் இடனாகி வந்த பல பொருளொரு சொல்லாகலின், திருவடிகள் தம்மை யடைந்தோரை ஆனந்த நிலையுட்சேர்த்தலும் அங்ஙனஞ் சேர்ந்தோர் மீட்டும் அவ்வானந்த நிலையினின்றும் போ தவசைவு தோற்றி வெளிப்படாமைக்கும் அவத்தைகளுட் சென்று தாக்கிக் கவரப்படாமைக்குங் காப்பாக அருளுருவாய் அதன் முன்னிற்றலுஞ் சிவத்துடன் சீவனை யிடைநின்று கூட்டுவித்தலுங் குறித்தது காண்க.

இக்குறிப்புணர்த்தவன்றே மலர்க்கால் என்னாது மலர்த்தாள்  என்றதென் றுணர்க.