உ
திருச்சிற்றம்பலம்
ஐந்தாம் அதிகாரம்
சரிதைக் கழற்றி
நடந்துக் குளித்துமிது நல்லாநா ளூணை
விடுந்தொழிலான் மெய்வருந்தி வீடென் – றடங்காதார்
என்றுசுக மேயிருப்பரிப்போதே துக்கமிவர்க்
கென்றெதிர்போ யின்பமுதிக்கும்.
(இ-ள்.) நடந்தும் குளித்தும் இது நல்ல நாள் ஊணை விடும் தொழிலால் மெய்வருந்தி வீடு என்று அடங்காதார்- பூப்பிரதெக்கணமாய் நடந்து சென்றும், கங்கை முதலிய தீர்த்தங்களாடியும், இது நல்ல நாள் என்ன ஊணை விடுத்தும், இவை முதலியன செய்யும் சரியைத் தொழிலால் மெய்வருந்தி, இங்ஙனம் செய்வனவே வீடென்று துணிந்து தற்போதம் அடங்காதார்
என்று சுகமே இருப்பர் இப்போதே துக்கம் இவர்க்கு என்று எதிர்போய் இன்பம் உதிக்கும் – எக்காலமும் ஓர் தொழிலையும் செய்யாது சுகமே இருப்பர்? இத்தொழில்களால் இவர்க்கு இம்மைக்கண்ணே துன்பம், இத்தொழில் வாசனை மறுமைக்கண்ணும் தொடரும் ஆகலின், எக்காலம் தான் என்றும் சிவம் என்றும் எதிரிடும் போதம் ஒழிந்து ஆநந்தம் தோன்றும்?
(வி-ரை.) தாம் குறித்தது வீட்டின்பமாயிருந்தும் அதனைப் பெறுதற்கு எது அல்லாத சரியைத்தொழிலை மிகவும் மெய்வருந்திச் செய்தலான், அவ்வின்பத்தைப் பெறுதற்கு ஏதுவாய்த் தற்போதத்தையும் எளிதில் ஒழித்து, அதனை எக்காலம் பெறுவரோ என்னும் காருணியத்தால், “என்றெதிர்போ யின்பமுதிக்கும்” என்றார்.
இத்திருவெண்பாவால் வீடடையத் தொடங்கினார் அறியாமையான் இத்தொழிலைச் செய்து வருந்துகின்றார் அந்தோ என்று இரங்கிக் கூறியவாறு காண்க.