உ
திருச்சிற்றம்பலம்
ஆறாம் அதிகாரம்
விரத்தி விளக்கம்
இங்ஙனம் சரிதாதிகளை நீத்துநின்றார் ஆயினும், உள் துறவு இல்லார்க்கு ஞானம் விளங்காது ஆகலின், இவ்வதிகாரத்தினுள் துறவு விளக்கங்கூறி உட்டுறவின் இலக்கணம் அறிவித்தார் ஆகலின், இவ்வதிகாரத்திற்கு விரத்தி விளக்கமென்று பெயராயிற்று. விரத்தி யெனினும் துறவு எனினும் ஒன்று.
அறிந்தவிடத் தின்பதுன்ப மாகா ததுவும்
மறந்தவிடத் தின்ப மயக்கு – மறிந்த
வலியறிவு நீயென்றானத்துவிதாநந்த
முலைய முதமுண்ட முனி.
(இ-ள்.) அறிந்த இடத்து இன்ப துன்பம் ஆகாது மறந்த இடத்து அதுவும் இன்பம் மயக்கும் அறிந்த அலி அறிவு நீ என்றான்- கருவிகள் முப்பத்தாறையும் கடந்து, அருளை அறிந்தவிடத்து, ஆண்டு இன்பமும் துன்பமும் உண்டாகா; அவ்வருளை மறந்தவிடத்து முன் நீங்கி நின்ற கருவிகள் வந்து கூடலான், அத்துன்பமும் இன்பமும் வந்து ஈண்டு மயக்கும், ஆகலின், பதி அறிவோடுங்கூடி இன்பதுன்பம் இன்றிய அப்பதி அறிவாயும், பாச அறிவோடுங்கூடி இன்ப துன்பமாயும் நின்று அதனையும் இவற்றையும் அறிந்த அலி அறிவு நீ என்று எனக்கு அருளிச்செய்தார்.
அத்துவித ஆனந்த முலை அமுதம் உண்ட முனி- இரண்டற்ற அத்துவிதத்தில் தோன்றும் பேராநந்தமாகிய திருமுலை அமுதத்தை அம்மை பொற்கிண்ணத் தோடும் கொடுப்ப வாங்கி உண்ட திருஞான சம்பந்தப் பிள்ளையார்,
(வி-ரை.) பதி அறிவு-ஆணறிவு; பாச அறிவு – பெண்ணறிவு, இவ்விருவகை அறிவும் போலன்றிப் பதிஅறிவோடுங் கூடிப்பதிஅறிவாயும், பாச அறிவோடுங் கூடிப்பாச அறிவாயும், ஆண் வடிவும் பெண் வடிவும் தழுவி நின்ற அலி போலிருத்தலின், பசு அறிவை, “அலியறிவு” என்றார்.
அம்மை ஆநந்தவடிவம் ஆகலின், அவளது திருமுலைப் பாலை “ஆநந்தவமுதம்” என்றார். அதுவும் என்பதனை அத்துன்பமும் இன்பமும் மயக்கும் எனக் கூட்டுக.
இத்திருவெண்பாவால் ஆன்மா ஒன்று உண்டென்று அறிவித்தவாறு காண்க.