பாசங் கழன்றாற் பசுவுக் கிடம்பதியா
மூசல் வடங்கழன்ற தொவ்வாதோ – நேசித்த
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் பாட்டுமக்கோ
மற்றைச் சமயமெங்கு மாம்.
(இ-ள்.) பாசம் கழன்றால் பசுவுக்கு இடம் பதி ஆம் ஊசல் வடம் கழன்றது ஒவ்வாதோ-உயிர்ச்சார்வுபொருட்சார்வு ஆகிய இருவகைச் சார்வும், இச்சார்வுகளை நீங்கிய போதும் இவற்றின் மேல் எழாநின்ற அவாவும், இவ்வவா நீங்கிய போதும் கண்ட பொருள்கள்மேற் சென்று பற்றும் இந்திரியங்களும், இவ்விந்திரியங்கள் அடங்கிய போதும் முன் ஏறியிருந்த வாசனையால் உள்ளெழும் மனநினைவுகள்ளும், இவை முதலிய பாசங்களெல்லாம் கழன்றபோது, இவற்றினின்ற பசுவுக்குப் பதியே இடமாம், அஃது எங்கனம் எனின், அந்தரமாய் நின்ற ஊசற்கயிற்றில் இருந்தோனுக்கு அவ்வூசற்கயிறு அற்றபோது நிலம் இடமாம், அதுபோல், அஃது ஒவ்வாதோ? (அதனை நீ அறிதி, அஃ தன்றி ),
நேசித்த பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் பாட்டு உமக்கோ மற்றைச் சமயம் எங்கும் ஆம்- தம்மால் இச்சிக்கப்பட்ட பற்றுக்கள் எல்லாம் அற்றபோதே அப்பற்றறுதி பிறப்பினை அறுக்குமென்று (திருவள்ளுவ நாயனார்) கூறிய குறள் வெண்பாப்பாட்டு உமக்கு மாத்திரமோ சம்மதம், மற்றைய சமயங்களுக்கெல்லாம் சம்மதமாம்.
(வி-ரை.) ஊசல் இருந்தபோதும் ஒழிந்தபோதும் அதனுள் இருந்தோனுக்கு அசைவும் அசைவின்மையும் உண்டாவது போல், பாசம் இருந்தபோதும் ஒழிந்தபோதும் அசைவும் அசைவின்மையும் ஆன்மாவிற்கு உண்டாமென்பதும் காண்க.
இத்திருவெண்பாவால் ஆன்மாவிற்குப் பாசமுழுதும் நீங்கின் பதியைத் தேடவேண்டுவது இன்றென்று அறிவித்தவாறு காண்க.