ஒழுவிலொடுக்கம்

161. மெய்யாகத் தோன்றிவிடும் பொய்யை விசாரிக்கிற்

மெய்யாகத் தோன்றிவிடும் பொய்யை விசாரிக்கிற்
பொய்யாய்ச் சுவர்ப்பாம்பாய்ப் போமன்றி – யையா
தொழிலைச் செயிற்றாணுச் சோரனைப்போற் றோன்றி
கழலப் பறையறைதல் காண்.

(இ-ள்.) மெய் ஆகத் தோன்றி விடும் பொய்யை விசாரிக்கில் பொய் ஆய் சுவர்ப்பாம்பு ஆய்ப்போம் அன்றி ஐயா தொழிலைச் செயில்- விசாரியாத படியினாலே மெய்யாகத் தோன்றும் பொய்யாகிய கருவிக்கூட்டங்களது உண்மையை நின்மலாவத்தையில் நின்று விசாரித்து அறியில், சுவரில் எழுதிய பாம்பு போலாய்ப் பொய்யாய்த்தோன்றும், அஃதன்றி, அவற்றை அங்ஙனம் விசாரித்தறிந்து நீங்காது வைத்துக்கொண்டு, அவை போம்படிக்கு, மாணாக்கனே நீ தவத்தொழில்கலைச் செய்தியெனின்; (அதுதான்).

தாணு சோரனைப்போல் தோன்றிக் கழலப் பறை அறைதல் காண் – சடமாகிய கட்டையைத் தீபத்தால் பாராதபடியினால் கள்வனைப்போல் தோன்றக்கண்டு வெருண்டு அக்கள்வன் நீங்கும்படிக்குப் பறை அறைதலோடு ஒக்கும்.

(வி-ரை.) சுவரில் எழுதிய பாம்பிற்குத் தோற்றரவு மாத்திரமே அன்றிச் சேட்டை இன்றா யது போல், கருவிகளை எதிரிட்டறிந்தபோது பிரபஞ்சம் தோற்றரவு மாத்திரமே அன்றி முன்போல் சேட்டியாது ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார்.

நின்மலாவத்தையில் நின்று அருட்கண்ணால் எதிரிட்டு பார்க்கும்போது சடமாய் நீங்கும் கருவிகளை மெய்யாகக் கருதிக்கொண்டு, அவை நீங்கும்படிக்குத் தவத்தொழிலைச்செய்யத் தொடங்கினமையால் இங்ஙனம் உவமை கூறினார்.

காண் – அசை

இத்திருவெண்பாவால் கருவிகளினது உண்மையைக் காணின் எல்லாம் பொய்யாய் விட்டு ஞானம் தோன்றும் அன்றி, தவத்தான் அங்ஙனம் விடுதலும் ஞானம் தோற்றலும் இன்றென்று அறிவித்தவாறு காண்க.

கருவிகளது உண்மையை அறிந்தால் எல்லாம் பொய்யாய்ப்போம் என்றீர். அப் பிரபஞ்சமும் தேகமும் பரிச்சேதம் இன்றாய்ப் போமோ எனின், மேற் கூறுகின்றார்.