ஒழுவிலொடுக்கம்

173. ஊமைமணி யாட்டுகினு மோசையழிந் தாற்போல

ஊமைமணி யாட்டுகினு மோசையழிந் தாற்போல
வாமதுபோனிற்க வரிதுகா – ணாமாய்
வளர்ந்த வசத்தையெலா மாளமரக் காலா
லளந்தெறிந்து போட்டது போ லாம்.

(இ-ள்.) ஊமை மணி ஆட்டுகினும் ஓசை அழிந்தால் போல ஆம் நாவிழந்த மணியைப் பிடித்து அசைப்பினும் ஓசை ஒழிந்து நின்றாற்போல- (பஞ்சவிடயங்களும் வலிய வந்து அடுப்பினும் அதிதீவிர பக்குவர்க்குப் போதங்கலங்காது நிராசையே) உண்டாம்;

அது போல் நிற்க அரிது ஆம் ஆய் வளர்ந்த அசத்தை எலாம் மாள மரக்காலால் அளந்து எறிந்து போட்டது போல் ஆம் – அவர் அங்ஙனம் நிற்கும் அது போல் நிற்க மற்றைய பக்குவர்க்கு மிகவும் அரிது காண், நானா உபாயத்தானும் அங்ஙனம் நிற்க வருமாயின் ஆசையால் முன்னர்ப்போதம் மேலிட்டு மேன்மேல் வளர்ந்த அதனது சேட்டை எல்லாம் இறந்து போம்படி அறிவாகிய மரக்காலால் இவ்வளவென்று அளந்து புறம்பாய் எறிந்து போட்டது போல் ஆம், காண் – அசை.

(வி-ரை.) நிராசையோடிருப்போரைக் கருவிகள் சேட்டியாது நீங்கும், அக்கருவிகள் நீங்கவே திருவருள் தோன்றும், அத்திருவருளால் போதத்தை ஈதென்று அளவிட்டறிந்து ஒழிக்கலாம் ஆகலின், இங்ஙனம் உவமை கூறினார்.

இத்திருவெண்பாவால் நிராசை உடையோரை வலிந்து விடயங்கள் அடுக்கினும் போதம் அசையாது ஆகலின், நிராசைவரின் போத ஒழிவு தானே வரும் என்பதும்,          இங்ஙனம் இருத்தல் மற்றைய பக்குவர்க்கு அரிதென்பதும், அங்ஙனம் ஆயினும் அவர்க்கும் உபாயத்தான் அவாவறுதி வருமாயின் அப்போதச்சேட்டை அளவிட்டு              எறியப்படும் என்பதும் அறிவித்தவாறு காண்க.

தநுகரணபுவன போகங்களில் சிறிதேனும் பற்றின்றி நிற்றற்கு உபாயம் எங்ஙனம் என்ற மாணாக்கனை நோக்கி, மேற் கூறுகின்றார்.