நாயலகை நெய்விரும்பி நக்குவது நஞ்சிட்ட
பாயசமு மெய்ப்பரிசப் பாவைமிகச் – சாயாநீர்
வேட்கை யசுணமிபம் விட்டின் மீன் வண்டிவையின்
சாட்சியைக்கண் டார் துறவா தார்.
(இ-ள்.) நாய் அலகை நெய் விரும்பி நக்குவதும் நஞ்சு இட்ட பாயசமும் பாவை மெய்ப் பரிசம் மிகச் சாயா நீர் வேட்கை – நாயானது வாள்வாயில் தடவிய நெய்யை விரும்பி அவ்வாள் வாயை நக்குவது போலும், விடங்கலந்த பாயசத்தை ஒருவன் சுவையென விரும்புவது போலுமாகும், பாவையரது மெய்ப்பரிசத்தை இன்பமாய் விரும்புதல் ஆகலினும், பொய்யாகிய அப்பாவையரது மெய்ப்பரிசத்தை மெய்யாகக் கண்டு அநுபவிக்க விழைதல் மிகவும் பொய்யாகிய கானல் நீரை மெய்யாகக் கண்டு தாகத்திற்கு உண்ண விரும்புதல் போலாம் ஆகலினும்,
அசுணம் இபம் விட்டில் மீன் வண்டு இவையின் சாட்சியைக் கண்டு துறவாதார் ஆர் – அசுணப்புள் சத்தத்தானும், யானை பரிசத்தானும், விட்டிற்பூச்தி உருவத்தானும், மீன் இரதத்தானும், வண்டு கந்தத்தானும், கெடுமென இவைகளைச் சாட்சியாக் கண்டுறலானும், இவ்வைந்து விடயங்களும் உளவாகிய அப்பாவையரைத் துறவாதார் யாவர்?
(வி-ரை.) வாள்வாயின் நெய்யை நக்கின நாய்க்கும். நஞ்சிட்ட பாயசம் உண்டோனுக்கும், முன்னர் அணுவள வின்பம் போல் தோன்றி, பின்னர் அதனால் மலையளவு துன்பம் வருவதுபோல் ,அநுபவிக்கும் போது சிறிது இன்பம் போல் தோன்றிப் பின்னைத் துன்பம் வரும் என்பதும், பொய்யாய்த் தோன்றும் கானல் நீரை மெய்யாய்க் கருதி உண்ணத் தொடங்கினோனைப்போல், பொய்யாய்த் தோன்றும் பாவையரை மெய்யாய்க் கருதி அநுபவிக்கத் தொடங்குவதென்பதும், ஓரோர் விடயத்தை விழைந்து ஒவ்வொன்று கெடுமெனில் ஐந்து விடயங்களும் உளவாகிய பாவையரை விழைந்தால், அவரால் வருங் கேட்டிற்கு அளவின்றென்பதும் இதனாற் காண்க.
இத்திருவெண்பாவால் பெண்கள் இன்பம் மிகச் சிறிதென்பதும், அதனால் வருந்துன்பம் மிகப் பெரிதென்பதும், அவர் கூட்டுறவு மாயை யென்பதும், அவர்கள் செய்யும் ஐம்புல நுகர்ச்சி பெருங்கேட்டைத் தருமென்பதும் இங்ஙனம் அறிந்தோர் தம் மனைவி அருந்ததிக் கற்பினள் ஆயினும் துறப்பரென்பதும் அறிவித்தவாறு காண்க.
எல்லோரும் மனைவி ஆகிய குடும்பத்தோடிருந்து, இன்பங்களை அனுபவித்துக்கொண்டு பூரிப்போடும் இருக்க, அக்குடும்பத்தை நீ துன்பமென்றீர், இஃதென்னை எனின், மேற்கூறுகின்றார்.