ஒழுவிலொடுக்கம்

177. குரங்கிற் றுனிச்சீக் குடும்பக் குழாமும்

குரங்கிற் றுனிச்சீக் குடும்பக் குழாமும்
பெருங்குப்பை யிற்கரடிப் பெண்டும் – பொருந்துவரோ
காலனுந் தீயுங் கடலுமிருங் கல்லுமாய்
மேலு நரகாய் விடும்.

(இ-ள்.) குரங்கின் துனிச்சீக் குடும்பக் குழாமும் பெருங் குப்பையில் கரடிப் பெண்டும் பொருந்துவரோ- ஓர் குரங்கைப் பல குரங்கு வந்து சேட்டித்தல்போல, தாய் தந்தை சுதர் சுற்றம் முதலியோர் தம்மை வந்து வாதிக்கும் குடும்பக்கூட்டத்தையும், அக்குடும்பக் கூட்டமாகிய பெரிய மலக்குப்பைக் கண் கரடி போலும் பற்றப்பட்ட பெண்டிரது கூட்டரவினையும், பொருந்தியிருப்பரோ உத்தமராயினார்? (ஆயின், எல்லோரும் அவரோடுங் கூடியிருக்க இல்லையோ? இவரென்னை அங்ஙனம் இராதுபோவது எனின்),

காலனும் தீயும் கடலும் இருங்கல்லும் ஆய் மேலும் நரகாய்விடும் – அக் குடும்பக் கூட்டம் காலனைப்போலும், தீயைப்போலும், கடலைப்போலும், பெரிய மலையைப் போலும், இம்மைக்கண்ணே துன்பந்தருவதாய் மறுமைக் கண்ணும் அதனோடுங் கூடியிருந்த வாசனையால் பிறப்பாகிய நரகத்தையும் தருவதாய்விடும் என அறிந்து அதுனோடுங் கூடியிரார்.

(வி-ரை.) சோறு கூறை முதலியன கொடுக்கும் போதும் கொடாதபோதும் வரும் பிணக்கானும், அவற்றிற் கேதுவாகிய திரவியந் தேடுதலானும், அதனைப்பாது காத்தலானும், அவர்க்கு வியாதிஆதி துன்பம் அபிமானபங்கம் வந்த காலையினும், அரையர் கலகம் அற்பகாலம் வந்த காலையினும், அவரிறந்த காலையினும், இவை முதலியவற்றால் அக்குடும்பத்தால் தேகதுக்க மனோதுக்கங்கள் இடையறாது வருதலின் “குரங்கிற்றுனிச்சீக் குடும்பக் குழாம்” என்றார்.

இத்துன்பக் குழுவில் கரடி போலும் குணத்தானும் செய்கையானும் இழிவாய பெண்டிரைக் கூடுவரோ என்பதனை, பெருங்குப்பையிற் கரடிப்பெண்டும் பொருந்து வரோ” என்று குறிப்பாற் கூறினார்.

காலன் உயிர்களைப் பாசத்தால் பிணித்துக்கொடு சென்று நிரையத்துள் வீழ்த்தி வருத்துதல்போல், துறந்து செல்கிறேனென்று இரண்டடிச் சென்றோனை மனை சுதர் முதலியோர் கரசரணங்களைப் பற்றிக்கொண்டு ஒலிட்டழுது அவனுள்ளம் இளகப்பண்ணி மீட்டுக் கொடுவந்து குடும்பமாகிய துன்பத்துள் அகப்படுத்தி வருத்துதலின், காலன் என்றும், ஒருவனைத்தீச்சூழ்ந்து கொண்டது போல சூழ்ந்து கோடலின் தீ என்றும், நடுக்கடலில் வீழ்ந்தோனுக்குக் கரைகண்டு ஏறக் கூடாதது போல், அக்குடும்பசாகரத்தில் வீழ்ந்தோனுக்கு இக்கரைகண்டு ஏறக் கூடாது ஆகலின், கடல் என்றும், மலையிருத்திக்கொண்டது போல குடும்பபாரந்தன் தலைச்சுமையாயிருத்தலின், இருங்கல் என்றும், இறக்கும் போது உயிர்க்கு எந்த வாசனை இருந்தது அந்த வாசனையோடும் சென்று பிறத்தலின், மேலும் நரகம் என்றுங் கூறினார்.

இவை இரண்டு திருவெண்பாவானும் மனைவியாதிய குடும்பம் துன்பங்கட்கும் பிறவி வாதனைகட்கும் உறைவிட மென்பதும், இதனை இங்ஙனமென்று ஆணவ மறைப்பான் அஞ்ஞானிகள் அறிந்திலரென்பதும், ஞானிகள் இதனைக் காணினும் கேட்கினும் நடுங்குவரென்பதும், இக்குடும்பமுயற்சி சிவத்தை அறியவொட்டாது மறைக்குமென்பதும், உத்தமபக்குவர் விடாது சூழ்ந்து வாதிக்கும் இக்குடும்ப வாதனையான் வரும் நட்டங்களை முற்றும் அறிந்து அதனை அக்கணத்தே விடுவரென்பதும், அறிவித்தவாறு காண்க.

இங்ஙனந் துன்பமென்று அறிந்து, துறந்து செல்வோர் தம்மை நம்பியிருந்த குடும்பத்தைப் பாதுகாத்தற்குச் சகோதரர் முதலாயினாருள் ஒருவரைத் துணையாக வைத்து, பின் துறந்து சேறலாகாதோ எனின், மேற் கூறுகின்றார்.