ஒழுவிலொடுக்கம்

185. கும்பிட்டுங் கீர்த்தித்துங் கோடி யுபசாரம்

கும்பிட்டுங் கீர்த்தித்துங் கோடி யுபசாரம்
வம்பிட்ட பத்தி வலைவழியை – நம்புவரோ
வூணாதி வாதனைக ளொன்றாத வப்பெருமை
வீணே விளைக்கு மெனின்.

(இ-ள். கும்பிட்டுங்  கீர்த்தித்துங் கோடி உபசாரம் வம்பு இட்ட பத்தி வலைவழியை நம்புவரோ – ஒருவன் வந்து அஷ்டாங்க பஞ்சாங்கத்தோடு வணங்கியும், அநேக தோத்திரங்களைப் பண்ணியுஞ் சுவாமிகள் அடியேன் மனைக்கெழுந்தருளுக என்று கோடி பேதங்களாய் உப சாரங்களைச் செய்தும், இங்ஙனம் அழைக்கும் புதுமை பொருந்திய பத்தி ஆகிய வலைநெறியை ஞானிகளாயினோர் ஓர் பொருளாகக் கருதிச் செல்வரோ? ஆயின், அன்போடு வணங்கி அன்னங் கொடுக்கிறேன் என்றழைத்தால் அவ்வன்ன மாத்திரஞ் சென்று வாங்கிக்கொள்ளலாகாதோ எனின்

ஊண் ஆதி வாதனைகள் ஒன்றாத அப்பெருமை வீணே விளைக்கும் எனின் – ஊண் உடுக்கை முதலிய வாதனைகளையும் விரும்பாத அந்த அவாஅறுதி ஆகிய பெருமை அவரிருக்குமிடத்து அவர் வேண்டா என்று தள்ளவும் வீணாய் அவ்வூணாதிகளைக் கொடுப்பிக்கும் ஆயின்.

(வி-ரை.) உபசாரமிகுதியை, “கோடி” என்றும், ஒருவரும் அங்ஙனஞ் செய்யக்கண்ட தின்மையால், “வம்பிட்ட” என்றுங் கூறினார்.

”ஊணாதி வாதனைகள்” எனவே நோய் குளிர்கட்கு மருந்து முறையுளும் வேண்டார் என்பதாயிற்று.

தாம் ஊணாதிகளை விரும்பி ஒருவரைப்பின் சேறலாகாதன்றி, ஒருவர் அன்போடும் வணங்கி ஊணாதி கொடுத்தற்குத் தம் மனைக்கு அழைத்தாலும் செல்லாதிருப்பது ஏதுகாரணம் எனின், மேற் கூறுகின்றார்.