ஒழுவிலொடுக்கம்

190. உண்டொழித்துத் தேடு முடம்பரா யொன்று முத

திருச்சிற்றம்பலம்

 எட்டாம் அதிகாரம்

       அருளவத்தைத் தன்மை

இங்ஙனம் சரியாதிகளை நீத்து உள்துறவு புறத்துறவுடையராய், பிருதிவி முதல் நாததத்துவம் ஈறாகச் சொல்லப்பட்ட தத்துவம் முப்பத்தாறையுங் கடந்து, ஆணவ இருளையுங் கடந்து, ஆன்மதரிசன முதலிய சுத்தாவத்தையில் நிற்போரது தன்மை கூறினமையால், இவ்வதிகாரத்திற்கு அருளவத்தைத் தன்மை என்று பெயராயிற்று.

உண்டொழித்துத் தேடு முடம்பரா யொன்று முத
லண்டர்பதத் தப்பாலு மைம்புலத்து – முண்டு
மழுங்கினர்க்குப் போகம் வருத்தமாய்த் தோன்ற
வெழுந்தவருள் கெட்டே னிதென்.

(இ-ள்.) உண்டு ஒழித்துத்தேடும் உடம்பர் ஆய் ஒன்று முதல் அண்டர் பதத்து அப்பாலும் ஐம்புலத்தும் உண்டு மழுங்கினர்க்கு -ஓருடம்பில் பிராரத்தத்தை உண்டொழித்து, அவ்வுடம்பில் அவ்வினையை உண்டொழித்தற்கு இடையே, இதாகிதங்களாகிய தொடர்பால் தேடும் ஆகாமியத்தால் தொன்றுதொட்டு வரும் உடம்புகளை உடையராய், இப்பூலோகமாகிய ஒன்று முதல் தேவர் பதவிக்கு அப்பாலும் ஆண்டாண்டுச் சென்றிருந்து ஐம்பொறிகளானும் அவ்வவ்வுடம்புகட்கு ஏற்ற விடயபோகங்களை இன்பமாகக் கண்டு உண்டு அளவில் காலந்தழும்பேறினார்க்கு

போகம் வருத்தமாய்த் தோன்ற எழுந்த அருள் கெட்டேன் இது என்– அப்போது இன்பமாய்த் தோன்றிய போகம் இப்போது துன்பமாய்த் தோன்ற உதயமாகிய திருவருள், கெட்டேன் ஈது என்கொல்!

(வி-ரை.) ஓர் பிரகாரம் இன்றிச்செய்த வினையின் பேதப்படியே தநுகரண புவன போகங்களும் பேதித்துத் தோன்றலான், “தேடு முடம்பரா யண்டர்பதத் தப்பாலு மைம்புலத்து முண்டு மழுங்கினர்க்கு” என்றார்.

தநுவாதிகள் பேதிப்பதாவன, நல்ல தேசத்து நல்லோர்கள் அங்கீகரித்த போகத்தை புசித்தலானும், நல்ல நினைவோடும் நல்ல சொல்லோடும் நற்றொழிலைச் செய்தலானும், பொல்லாத தேசத்துப் புவன போகங்களைப் புசித்தலானும், பொல்லாத நினைவோடும் பொல்லாத சொல்லோடும் புன்றொழிலைச் செய்தலானும், இவற்றுள் ஒன்று நன்றும் ஒன்று தீதுமாய் மாறிமாறி வருதலானும், இவை முதலாயவற்றால் பேதிப்பதெனக் கொள்க.

இத்திருவெண்பாவால் சுத்தாவத்தையில் நின்று அருளைத் தரிசித்தோர்க்கு விடயத் துன்பமாயத் தோற்றும் என்று அறிவித்தவாறு காண்க.