ஒழுவிலொடுக்கம்

196. பேயைப் பெண் ணென்றிருந்தும் பித்தளைக்குப் பொன்றோற்று

பேயைப் பெண் ணென்றிருந்தும் பித்தளைக்குப் பொன்றோற்று
மாயத்தூ ணுண்டுமன மாண்டு மயல் – போயத்
திடுக்கமே பித்தாய்த் தெளிமயலா னாற்போ
னடக்கு மருண் மேலிட்ட நாள்.

(இ-ள்.) பெண்ணை பேய் என்று இருந்தும் பித்தளைக்குப் பொன் தோற்றும் மாயத்து ஊண் உண்டு மனம் மாண்டு மயல் போய் – பெண்களைப் பேய்களைப் போலும் பிடித்து வாதிப்பவரென்று கண்டிருப்பதாயும், பித்தளைக்குப் பொன் தோற்றுப்போவதாய்க் காண்பதாயும், உதர எரிவாய்த் தோன்றும் மாயத்திற்குக் காடி கூழ் முதலிய ஊண்கள் யாது கிடைப்பினும் வாங்கி உண்டு ,அவைகள் மேல் வைத்த மயலும் போய் ,அவற்றை மெய்ப்பொருளாகக் காணும் மனமும் இறந்து

அத்திடுக்கமே பித்து ஆய்த் தெளி மயல் ஆனாற் போல் நடக்கும் அருள் மேலிட்ட நாள் – அப்பொருந்தல் அருந்தல்களையும் அவற்றிற்கு ஏதுவாய பொன்னையும் விழைந்து நெடுநாள் பிறவித் துன்பத்தால் வருந்தினோமே என்னும் அந்தத் திடுக்கந்தானே விடாப் பிராந்தியாய் அறிவு பயித்தியங்கொண்டோனைப் போலவும் விளங்குந் திருவருள் மேலிட்ட காலத்து

(வி-ரை.) பேய் பிடியுண்டு விடுபட்டோனுக்கு ஓர் காலத்து அதனைக் கண்டபோது பயந்தோற்றல் போல் முன் பெண்களால் வருந்திய வருத்தத்தை நோக்கி அவரைக் கண்டபோது பயந்தோற்றலான் அங்ஙனம் உவமை கூறினார்.

“பித்தளைக்குப் பொன் றோற்றும்” என்று அதனினும் இழிவாய்க் கூறினமையால் ஓட்டுச் சின்னங்களையுஞ் சிறு கற்களையும் போல் காண்பார் என்பதாயிற்று.

எங்கும் பரிபூரணமாய் அருள் வடிவாயிருத்தலானும் பொன் பெண் மண் ஊண் உடல் என்னும் ஐவகையும் வெறுத்து உலகத்தாரோடு மாறுபட்டிருத்தலானுந், “தெளிமய லானாற்போல்” என்றார்.

இத்திருவெண்பாவால் அருள் மேலிட்ட நாள் நடக்கும் குணங் கூறியவாறு காண்க.