நடை தளர்ந்து மெய்ம்மறந்து நாண மழிந்து
யுடறளர்ந்து கீழ்க்குரலிட் டூண்போய் – மடலெடுப்பாய்ச்
சத்தாதி கெட்டுமனந் தாக்கற்றுச் சந்தழிந்த
பித்தர்க்கு மாகா பிணி.
(இ-ள்.) நடை தளர்ந்து மெய் மறந்து நாணம் அழிந்து உடல் தளர்ந்து கீழ்க்குரல் இட்டு ஊண் போய் – கருவிச் சேட்டைகளடங்குதலின் நடை தளர்ந்து, அருளே வடிவாயிருத்தலின் உடம்பு மறந்து, உடம்பு மறத்தலின் பிரபஞ்சிகள் பழிப்பார் என்பது குறித்து வரும் நாணம் அழிந்து, உண்டிமேல் விருப்பின்மையான் உடல் தளர்ந்து, மனமௌனியாயிருத்தலின் கீழ்க்குரற் பேச்சாய், அருளமுதம் புசித்தலின் சிற்றூண் உண்பதாய்
மடல் எடுப்பு ஆய்ச்சத்தாதி கெட்டு மனம் தாக்கு அற்றுச் சந்து அழிந்த பித்தர்க்கும் ஆகா பிணி –அருளையே அன்றி மற்றொன்றையும் நாடாமையின் மடலெடுப்பான் போலாய், ஐந்தவாவும் அற்றமையால் சத்தாதி விடயங்களும் இறந்து, இச்சத்தாதி விடயங்கள் இறந்தமையால், மனம் ஒன்றோடும் தாக்கற்று, மனம் ஒன்றோடுந்தாக்கற்றமையால் அருளென்றும் தானென்றும் இன்றி இரண்டற்ற இவ்வருள் தலைமீக்கொண்ட பித்தர்க்குஞ் சுகாதீத முத்தியை அடைந்தோரைப்போல் பிறவி நோய்கள் உண்டாகா.
(வி-ரை.) அருள் மேலீட்டையும் பிரபஞ்சப் பற்றொழிவையும் உடையோர் தேகாந்தத்து அறிவோடுஞ் சென்று சுகாதீதமுத்தியை அடைவர். ஆகலின் “பித்தர்க்குமாகா பிணி” என்றார்.
இத்திருவெண்பாவால் அருள்மேலீட்டை உடையோர்க்கும் பிறப்பு இன்றென்று அறிவித்தவாறு காண்க.