விபரீதப் பூணு முடையும் விளியா
லபிமானமுமவரா லாட்டுந் – தபசுபோற்
செய்யுஞ் சடங்குந் திகைப்புஞ் சிதம்பரத்தி
லையன் றனக்கறிய லாம்.
(இ-ள்.) விபரீதப் பூணும் உடையும் விளியால் அபிமானமும் அவரால் ஆட்டும் தபசுபோல் செய்யும் சடங்கும்- பார்த்தபேருக்கு விபரீதமாய்த் தோன்றும்படி சிரம் செவி களம் கரம் மார்புகளில் மிகவும் பூண்டுகொள்ளும் உருத்திராக்கப் பூண்களும், உத்தூளனமும், ஒட்டு வேட்டி உடையும், வார்த்தையினால் யாம் சிவமதம் என்று பிடித்துப் பேசும் அபிமானமும், அவரிடத்துண்டாம் ஆடல் பாடல்களும், தவசுபோற் செய்யும் ஞான ஆசாரங்களும்.
திகைப்பும் சிதம்பரத்தில் ஐயன் தனக்கு அறியல் ஆம் – அவ்வேடத்திற்கும் நடைக்கும் உரிய பரிபூரண ஞானம் அகத்து இன்றி திகைத்திருத்தலும், ஆகிய இவை உடையாரது கருத்தினை, சிதாகாசத்தில் பஞ்சகிருத்திய நடனம் பண்ணாநின்ற பரமசிவனது திருவுளத்திற்கே அறியலாம் ,அன்றி மற்றையர்க்கு அறியலாகாது.
(வி-ரை.) ஆபரணம்போல் பூண்டு கோடலின், உருத்திராக்கத்தை, “பூண்” என்றார். உருத்திராக்கங் கூறினமையால் உத்தூளனம் வருவிக்கப்பட்டது.
அகத்து ஞானம் இன்றி, புறத்து இங்ஙனங்காட்டுவன எல்லாம் தற்போதத்தால் உண்டாவன ஆகலின், இவர் நிருவிகாரிகள் அலரென்பதுங் காண்க. இவர்களும் ஞானி கள் போல் பிறர்க்குத் தோற்றலின், “சிதம்பரத்தி லையன் றனக்கறியலாம்” என்றார்.
இத்திருவெண்பாவால் ஞானிகள் போல் நடிக்கின்றோரைப் பொய்ஞ்ஞானிகளென்று அறிவித்தவாறு காண்க. மெய்ஞ்ஞானிகள் நடை இன்னுங் கூறுகின்றார்.