ஒழுவிலொடுக்கம்

225. சாவே பெருநோன் பாய்ச் சந்தற்ற சத்தியர்க்குத்

சாவே பெருநோன் பாய்ச் சந்தற்ற சத்தியர்க்குத்
தேவாரங் காலந் தியான மறம் – பாவம்
விதிவிருத்தம் பேசுகைக்கு வேதா கமங்க
ளதிசயிக்கு மேலுரைப்பா ரார்.

(இ-ள்.) சாவே பெருநோன்பு ஆய்ச் சந்து அற்ற சத்தியர்க்குத் தேவாரம் காலம் தியானம் அறம் பாவம் விதி விருத்தம் பேசுகைக்கு – தற்போதம் இறப்பதே பெருந்தவமாய்க் கொண்டு அதனைக் கெடுத்துச் சிவத்தோடும் இரண்டறக் கலந்த சத்திய ஞாளிகட்குத் தேவாரமுதலிய தோத்திரங்களை ஓதலும், காலாகாலங்கள் அறிந்து சிவாலயங்களிற் சென்று பணிதலும், ஒரோர் பாவனையைக்கருதித் தியானித்தலும், சிவபூசையாதி புண்ணியங்களைச் செய்தலும், இவை அன்றி பாவங்களைச் செய்தலும் ஆகிய இவ்விதி விருத்தங்கள் உள என்று சொல்வதற்கு

வேத ஆகமங்கள் அதிசயிக்கு மேல் உரைப்பார் ஆர் – வேதங்களும் ஆகமங்களும் அதிசயிக்கும் எனின் அவற்றிற்கு மேல் மற்றியாவர் சொல்வார்?

(வி-ரை.) போதம் சிறிது எழினும் அதனைக் கெடுத்துச் சிவத்தோடும் கலந்திருப்பதே அவர்க்குச் சகல நோன்புகளும் ஆகலின், “சாவே பெருநோன்பாய்ச் சந்தற்ற சத்தியர்” என்றார். அங்ஙனம் செய்வதே நோன்பாய்க் கொண்டோர்க்கு அதற்குமேல் மற்ற நோன் பொன்றும் இன்மையான் அவர்க்கு விதிவிருத்தம் இலவாயின.

“வேதாகமங்கள திசயிக்கும்” என்றதனால் அவற்றான் விதிவிருத்தம் அறிவோர்க்கு வேறு சொல்வதற்கு இடமின்மையான், “மேலுரைப்பாரார்” என்றார்.

விதியாவது வேதாகமங்கள் சிவபூசாதிகளைச் செய்க என்று கூறுவது. விருத்தமாவது மதுபானாதிகளை விடுக என்று கூறுவது.

இவையிரண்டு திருவெண்பாவானும் ஞானிகட்கு விதிவிருத்தங்கள் இல என்று அறிவித்தவாறு காண்க.