ஒழுவிலொடுக்கம்

231. கரையடுக்க வந்தாற் றிரையலைக்குங் கப்பல்

கரையடுக்க வந்தாற் றிரையலைக்குங் கப்பல்
பொருளடுத்தாற் றோன்றும் பொய்ப்போதம் – விருதினவன்
வெற்றிக் குதிகுதித்தோன் போல்வேண்டும் விட்டதுபின்
பற்றுமதிற் சிக்கெனநிற் பாய்.

(இ-ள்.) கரை அடுக்க வந்தால் திரை அலைக்கும் கப்பல் பொருள் அடுத்தால் தோன்றும் பொய்ப்போதம் அலை அலைக்குங் கரை கடந்து சென்று, கடல் நடுநின்ற கப்பல் மீட்டும் அக்கரையடுக்க வந்தால் அக்கப்பலை அலை அலைக்குமாறு போல, விடயங்களைத் துறந்து சென்று துறவின்கண் நின்ற நீ மீட்டும் அவ்விடயங்களை அடுத்தால் பொய்யாகிய அவ்விடயபோதந் தோன்றி அறிவை அலைக்கும், ஆகலின்

விருதினவன் வெற்றிக் குதிகுதித்தோன் போல் வேண்டும் விட்டது பின்பற்றும் அதில் சிக்கென நிற்பாய்- தன் பகைவனைச் சயங்கொண்டால் அன்றி விடேனென்னும்      விருதினோன் போலும், ஒருவரோடு வாது கூறி வெற்றிக்குத்துரவு தாவினோன் போலும், நீயும் பிடித்த துறவை முற்றும் சாதிக்கவேண்டும். அதனை விடாது சாதிக்கவேண்டின், விடயங்களையடாதே, அடுத்தால் முன்னர் நீ விட்ட பற்றுக்க ளெல்லாம் இப்போதும் வந்து பற்றும், இவை உன்னைப் பற்றாது அகலும்படி அத்துறவின் கண் உறுதிப்பட நிற்றி.

(வி-ரை) கரை அடாது கடலின் நடுநின்ற கப்பலை அலை அலையாதது போல, விடயங்களை அடாது துறவின் கண் நின்றோரை விடயபோதம் அலையாதென்பது இவ்வுவமைக் குறிப்பாற் காண்க.

விருதினோனுக்கு எவ்விதத்தானும் தன் பகைவனைச் சயங்கொள்வதே விருது; கூடாதாயினும் அவனோடும் பொருது இறத்தலே விருது போல், துறவினோனுக்குத் தன் பகை என்னும் மாயைப் படைகளாகிய முப்பத்தாறையுங் கடந்து வீடடைதலே துறவு. அங்ஙனங் கடக்கக்கூடாதாயினும் அதனைக் கடத்தற் கேதுவாய சுத்த வாசனையோடு நின்று இறத்தலே துறவு ஆகலின், ” விருதினவன் போல்” என்றும்;

வெற்றிக்கு அறுபதடித்துரவு தாவத் தொடங்கினோன் அறுபத்தோராமடி தாவினான் எனின் அது வெற்றி, அது தவறின் வெற்றியும் இழந்து அத்துரவினும் வீழ்வன், அதுபோல, விடயங்களைத் துறக்கத்தொடங்கினோன் அவ்விடயங்களையும் துறந்து தற்போதத்தையும் துறப்பதே துறவு, அங்ஙனஞ் செய்யாது அவ் விடயங்களைச் சாரின் அத் துறவினான் வரும் பெருமையும் இழந்து பிறப்பினும் வீழ்வன் ஆகலின், “வெற்றிக்குதி குதித்தோன் போல்” என்றுங் கூறினார்.

“தத்துவத்தின் போர்வை” என்னுந் திருவெண்பா முதல் இவை மூன்று திருவெண்பாவானும் ஞானிகளது பெயரும் தரமும் துறந்ததைச் சாதியாது மீட்டுஞ் சாரலா காதென்பதும் அறிவித்தவாறு காண்க.

எட்டாம் அதிகாரம் அவத்தைத் தன்மை முற்றிற்று.