உ
திருச்சிற்றம்பலம்
ஒன்பதாம் அதிகாரம்
வாதனை மாண்டார் தன்மை
குடும்பத்தோடு கூடியிருந்து ஞானம் பெற்று, அக்குடும்பவாதனை மாண்டு நின்றார் தன்மை கூறினமையால் இவ்வதிகாரத்திற்கு வாதனை மாண்டார் தன்மை என்று பெயராயிற்று. துறவிகளாயிருந்து ஞானம் பெற்றோரும், அன்றிக் குடும்பிகளாயிருந்து ஞானம் பெற்றோரும் உள ராகலின், அவ்வதிகாரத்தின் பின் இவ்வதிகாரம் வைக்கப் பட்டது.
ஞானம் இல்லாவிடினும் வைராக்கியத்தால் வீட்டு நெறி அடையலாகாதோ எனின், மேற்கூறுகின்றார்.
ஞான மிலாத வைராக்கி நன்றல்ல
கானவர்க்கு நோவினர்க்குங் கள்ளர்க்கு – மானதுவெ
னெந்நிலைக்கே நின்றாலெ னெவ்விடயத் தேய்ந்தாலென்
றன்னிழப்பே யின்பாந் தலம்.
(இ-ள்.) ஞானம் இல்லாத வைராக்கி நன்று அல்ல கானவர்க்கும் நோவினர்க்கும் கள்ளர்க்கும் ஆனது என்- அகத்துப் பரிபூரண ஞானம் இல்லாதார், புறத்துச் செய்யும் வயிராக்கிய நன்றல்லவாகும், அஃது எங்ஙனம் எனின், மலை கானில் சஞ்சரிக்கும் வேடர்களுக்கும், விடா நோயினர்க்கும், பொருள் திருடும் கள்வர்க்கும் வைராக்கியம் உண்டாவது என்னை? ஆகலின், இவரது வைராக்கியத்தோடு அவரது வைராக்கியம் ஒக்கும்
என் நிலைக்கே நின்றால் என் எவ்விடயத்து ஏய்ந்தால் என் தன் இழப்பே இன்பு ஆம் தலம் -அகத்துப்பரிபூரண ஞானம் உடையர் அரசுரிமை முதலியன உலக வியாபா ரங்களில் யாது நிலையில் நிற்பினும் என்னை? வனிதாதி விடயங்களில் யாது விடயங்களோடு கூடி யிருந்தாலும் என்னை? அந்நிலையும் அவ்விடயங்களும் இவர்க்கிடமும் அன்று இன்பமும் அன்று, தற்போத இழப்பே இடமும் இப்போத இழப்பில் தோன்றும் இன்பமே இன்பமும் ஆம்.
(வி-ரை.) தழை உடுத்தல், மூலபலங்களைப் புசித்தல் இராப்பகல் கானிற் சஞ்சரித்தல், பனி மழை வெய்யில் காற்றுகளைப் பொறுத்தல் முதலியன கானவர் வைராக்கியம்; வனிதாதி விடயபோகங்களைத் துறந்திருத்தல் விடாநோயினர் வைராக்கியம், பகைவர்க்கு அச்சம் இன்றித் தம் உடலை இழந்து இருளிற்சேறல் முதலியன கள்வர் வைராக்கியம்; இவரது வைராக்கியங்களால் போத இழப்பும் இன்பமும் இன்றாயின போல், அவரது வைராக்கியத் தானும் போதவிழப்பும் இன்பமும் இன்றாகலின், அவரது வைராக்கியத்தை இவரது வைராக்கியத்திற்கு உவமை கூறினார்.
அகத்துப்பரிபூரண ஞானம் உடையார்க்கு யாது நிலையில் நிற்பினும், யாது விடயங்களைப் புசிப்பினும், அவற்றை அந்தப் பரிபூரண ஞானத்தால் பார்த்தழித்தலின், அவற்றோடுந் தாக்கற்று நிற்பதும், இங்ஙனந் தாக்கற்று நிற்றலால் போத இழப்பும், இப்போத இழப்பால் பேரின்பமும் உண்டாம் ஆகலின், “எந்நிலைக்கே நின்றாலென் எவ்விடயத்தேய்ந்தாலென் றன்னிழப்பே யின்பாந்தலம்” என்றார்.
அஃது அன்றி, விடய இன்பத்திற்கு ஏதுவாய் உலக வியாபாரங்களைச் செய்வார்போல், இவர் யாது நிலையில் நின்றார் எனினும், அதனுள் தாக்கற்று நின்ற சொரூப இன்பத்திற்கு ஏதுவாய தற்போத இழப்பைச் செய்வாரென்பதும், அவ்விடய இன்பங்களைத் தாம் அற்று அநுபவித்தலால் அவற்றை அநுபவிக்குந்தோறும் தாம் அற்ற விடத்து உண்டாம் பேரின்பம் மேலிடுமே அன்றி, அவ்வின்பம் ஓர் பொருளாய் அவர்க்குத் தோற்றா தென்பதுங் காண்க.
“தன்னிழப்பே யின்பாந்தலம்” என்றமையான், அந்நிலையும் அவ்விடயமும் இடமும் இன்பமும் அன்றென்பது வருவிக்கப்பட்டது.
வைராக்கிய மென்பது வைராக்கி என்று கடைகுறைந்து நின்றது.
ஞானம் பெறுவோர்க்கு இல்வாழ்க்கையைத் துறக்க வேண்டாவோ எனின், மேற் கூறுகின்றார்.