ஒழுவிலொடுக்கம்

234. மனையிழக்கி லோமனது மாறாது மாய்த்த

மனையிழக்கி லோமனது மாறாது மாய்த்த
தனையிழக்கி லோசிவனைச் சார்ந்தங் – கனுபவிக்கைப்
போகா தது போகிற் பூரணமாம் பூரணந்தா
னாகா திருப்பதெவர்க் காம்.

(இ-ள்.) மனை இழக்கிலோ மனது மாறாது மாய்த்த தனை இழக்கிலோ சிவனைச் சார்ந்து அங்கு அநுபவிக்கை போகாது அதுபோகில் பூரணம் ஆம் – நீர் இங்ஙனம் கூறிய ஆற்றான் இல்வாழ்க்கையைத் துறப்பது துறவன்றோ எனின், அவ்வில்வாழ்க்கையைத் துறக்கின் அதன்கண் நின்று அநுபவித்த விடயவாதனை மனத்தின்கண் மாறாது எழும் ஆகலின், அது துறவு அன்று, ஆயின், மனத்தை மாய்ப்பது துறவோ எனின், மனத்தை மாய்த்த தற்போதம் எழும் ஆகலின், அது துறவு அன்று; ஆயின் தற்போதம் இழப்பதோ துறவு எனின், அத்தற்போதம் இழக்கில் சிவத்தை அடைந்து ஆண்டுச் சுகத்தை அநுபவிக்கை போகாது ஆகலின், அது துறவு அன்று; ஆயின், சுகப்பேறிழப்பது துறவோ எனின், அச்சுகப்பேறு போகில் சிவபூரணந்தானாம், அப்போது இங்ஙனம் சிவபூரணந்தான் ஆனேன் என்னும் வாதனை தோன்றும் ,ஆகலின், அது துறவு அன்று; ஆயின் இனித் துறவு தான் யாது எனின்,

பூரணம் தான் ஆகாது இருப்பது எவர்க்கு ஆம்- அச் சிவபூரணந்தான் ஆனேன் என்னும் வாதனையு மறந்து நிற்பது துறவு, இங்ஙனம் சிவபூரணந் தான் ஆகாதிருப்பதாய துறவு யாவர்க்குண்டாம்.

(வி-ரை.) “மாய்த்த” என்பதற்கும் “தனையிழத்தல்” என்பதற்கும் இடையில் தற்போதம் எழும் என்பது வருவிக்கப்பட்டது.

இவை மூன்று திருவெண்பாவானும் மெய்த்துறவாவது இதுவென்று அறிவித்தவாறு காண்க.

இல்வாழ்க்கையோடு கூடியிருந்தும், இத்துறவெய்தினோரைத் துறவிகளென்று சொல்லப்படுமோ எனின், மேற் கூறுகின்றார்.