ஒழுவிலொடுக்கம்

241. அறியார் வழிகேட் டறிந்து நடக்க

திருச்சிற்றம்பலம்

பத்தாம் அதிகாரம்

    நிலையியல்பு

இதனுட் கூறிய உண்மைநிலை தவறினும், மீட்டும் அதனைச் சென்றடைதற்கு உபாயங் கூறினமையான், இவ்வதிகாரத்திற்கு நிலையியல்பென்று பெயராயிற்று.

அறியார் வழிகேட் டறிந்து நடக்க
வறிவா ரறிவென் றறியார் – மறையாக்
குடையிருக்கத் தாமே குதித்துங் கடந்து
மடர் மழைக்கே வாறவர்போல் வார்.

(இ-ள்.) அறியார் வழி கேட்டு அறிந்து நடக்க அறிவார் அறிவு என்று அறியார்–  தாங்கருதிய ஊருக்குச் செல்லும் வழி அறியார், அவ்வழியறிந்தோரைக் கேட்டறிந்து நடக்கவும், தம்மால் அறிந்து நடப்பதாய்க் கருதுவரன்றி, அவ்வழி அறிவார் அறிவித்த அறிவு தாம் அவ்வழி அறிந்த அறிவென்று அறியார், அதுபோல, தாம் முன்னர் அறியாத கருவிகள் முப்பத்தாறையும், இப்போது அருள் அறிவிக்க, அவற்றை அறிந்து கடந்து செல்லவும், தம்மால் அவற்றை அறிந்து கடந்து சென்றதாய்க் கருதுவரன்றி, அவ்வருள் அறிவிக்க அறிந்த அறிவு, தாம் அக்கருவிகளை அறிந்த அறிவென்று அறியார்

மறையாக் குடை இருக்கத் தாமே குதித்தும் கடந்தும் அடர் மழைக்கு ஏவார் அவர் போல்வார்-அடர் மழைக்கண் ஓரூர்க்குச் செல்லத் தொடங்கினோர் மழை தம்மேல் தாக்காதபடி தமக்கு மறைப்பாகக் குடைகைக்கண் இருக்கவும் அக்குடையைத் தம்மேற்கொண்டு செல்லாது, மழைத்திவலைகட்கு இடையே தாமே குதித்துங் கடந்தும்

அவ்வடர் மழைக்கண் நனைந்து செல்கின்றாரைப் போல், கருவிகளைக் கடந்து வீடடையக் கருதினோர் அக்கருவிகள் தம்முள் தாக்காதபடி, அருள் தம்மைவிட்டு நீங்காதிருக்கவும், இவ்வருளை முன்னிட்டுக்கொண்டு செல்லாது, அக்கருவிகளைத் தற்போதத்தால் அறிந்துங் கடந்துஞ் செல்வதாகக்கருதி அவற்றுள் நுழைவார் இதென்னை?

(வி-ரை) முன்னர் அறியாதிருந்த கருவிகளை இப்போது அறியவந்தது திருவருளால் அறியவந்தது என்று அறியாது, தம்மால் அறிந்ததாகக் கருதினமையால், இங்ஙனம் உவமை கூறினார்.

கருவிகளை நீக்கத் தொடங்குவோர் திருவருளை முன்னிட்டுக்கொண்டு நீக்காது, தற்போதத்தை முன்னிட்டு நீக்கத்தொடங்கின், அக்கருவிகள் நீங்காது பண்டையப்படி மூடும்,ஆகலின், இங்ஙனம் உவமை கூறினார்.

இத்திருவெண்பாவால் கருவிகளை அறிந்து நீங்கி நின்ற அறிவு, அருளறிவிக்க அறிந்த அறிவென்று அறிய வேண்டும் என்பதும், கருவிகளை நீக்கிச் செல்லும்போது தற்போதத்தைப் பின்னிட்டு அருட்போதத்தை முன்னிட்டு நீக்கிச் செல்லவேண்டும் என்பதும் அறிவித்தவாறுகாண்க.

கருவிகளை இங்ஙனம் நீக்கித் திருவருளைக் கூடு நிட்டைகூடாதாயினும், கேவல சகலங்கள் தாக்காது அருளே எவைக்குந் தாரகமென்று அறிந்து நிற்றற்கு உபாயம்யாது எனின், மேற் கூறுகின்றார்.