ஒழுவிலொடுக்கம்

245. தத்துவம் போய்க் கேவலம் போய்த் தான் போயருள் கழன்று

தத்துவம் போய்க் கேவலம் போய்த் தான் போயருள் கழன்று
சுத்தபரை யாய்த்தன் சுதந்தரம்போய்ச் – சத்தி
யொழிவிலே போதம்போ யொன்றாகா வொன்றி
னழிவிலே இன் பவதீ தம்.

(இ-ள்.) தத்துவம் போய்க் கேவலம் போய்த் தான் போய் அருள் கழன்று சுத்த பரை ஆய்த் தன் சுதந்திரம் போய்ச்சத்தி ஒழிவிலே போதம் போய்-நினைப்பாய் நின்ற தத்துவ முப்பத்தாறையும் நீங்கி அவற்றின் மேல் மறப்பாய் நின்ற கேவலாவத்தையையு நீங்கி அத்தத்துவங்களையுங் கேவலாவத்தையையும் இவை என்றறிந்து நீங்கி நின்ற அறிவுதான் எனத் தன்னை அறிந்து அவைகளை அறிந்து நீங்கவும் தன்னை அறியவும் வந்தது திருவருள் அறிவிக்க அறிய வந்ததென்று அறிந்து தானறிந்தேன் என்பது நீங்கி, தனக்கறிவித்த அவ்வருளைத் தரிசித்து அவ்வருளையும் கழன்று, நிருமலமாய் உள்ள பரையே தானாகி, அப்பரையை அறிந்த இடத்து, இது அது என்று தான் காண்பானும் காட்சியுமாய் அறிந்து வந்த தற்சுதந்தர அறிவு நீங்கி, அப்பராசத்தி நீக்கத்தில் தற்போதம் ஒழிந்து ஆநந்தா நுபவம் பெற்று, அதன் பின்னர்,

ஒன்று ஆகா ஒன்றின் அழிவிலே இன்ப அதீதம்- இங்ஙனம் கூறியவற்றுள் ஒன்றுந் தானாகாத ஒன்றாயிருந்த சிவத்தில் தான் இரண்டறக் கலந்து போதவாசனையும் இறந்த இடத்தில் சுகாதீதம், இச்சுகாதீதமே உண்மைநிலை என்று அறிதி.

(வி-ரை.) பரையோகத்தில் ஆன்மாவினது தற்சுதந்தர அறிவுகெடும் ஆகலின், “சுதந்தரம் போய்” என்றும், அப்பராசத்தி நீக்கத்தில் போதம் இறந்து ஆநந்தாநுபவம் உண்டாம் ஆகலின், “சத்தியொழிவிலே போதம் போய்” என்றும், ஆன்மா சிவத்தோடு இரண்டறக் கலந்தவிடத்துப் போதவாசனை ஒழிதலானும், இவ்விடஞ் சுகாதீதம் ஆகலானும், “ஒன்றாகா வொன்றி னழிவிலே யின்ப வதீதம்” என்றுங் கூறினார்.

இன்பாதீதம் என்றமையால் இன்பப்பேறு வருவிக் கப்பட்டது. தத்துவ முதலியன போக்கப்போவன ஆகலின், போயென்பது நீங்கி என்று கூறப்பட்டது

இத் திருவெண்பாவால் உண்மைநிலை ஈதென்று அறிவித்தவாறு காண்க.

இவ்வாநந்தப்பேறு பெறுமாறு எங்கனம் எனின், மேற் கூறுகின்றார்.