ஒழுவிலொடுக்கம்

247. அறிந்தழுந்தி யாராய்ந் தகம்புறமாய்த் தேடி

அறிந்தழுந்தி யாராய்ந் தகம்புறமாய்த் தேடி
மறந்தவனாய்த் தானாய் மயங்கிப் – பிறிந்து
சுகதுக்க மாய்ப்பதறிச் சுட்டுத் தொழில் போய்ப்
பகைகெட்டது துறவப் பா.

(இ-ள்.) அகம் புறம் ஆய் ஆராய்ந்து தேடி அறிந்து அழுந்தி மறந்தவன் ஆய்த் தான் ஆய் மயங்கிப் பிறிந்து சுக துக்கம் ஆய்ப் பதறி – தற்போதத்தால் விடயங்கள் எவ்விதத்தால் உண்டாம் என்று உள்ளும் புறம்புமாய் விசாரித்துத் தேடியும், அவ்விடயங்கள் கிடைத்தகாலை, அவற்றை ஞானேந்திரியங்களால் அறிந்து கன்மேந்திரியங்களாற் பற்றி அந்தக்கரணங்களால் அவற்றுள் அழுந்தியும், அவ்விடயங்களைக் கேவலத்தில் மறந்தவனாயுஞ், சகலத்தில் அவ்விடயங்களே தானாய் மயங்கியும், விடயங்கள் தன்னைப் பிரியாது நின்றவிடத்து, அவற்றில் சுகரூபியாய்ச் சென்று பற்றிப்பதறியும், அவை தன்னைப் பிரிந்து நீங்கியவிடத்துத் துக்கியாய் நின்று பதறியும்,

சுட்டுத் தொழில் போய்ப்பகை கெட்டது துறவு அப்பா — இங்ஙனம் மயங்கி நின்ற சுட்டுப்போதமுங் கெட்டு, அவ்விடயங்களாகிய உயிர்ப்பகையுங் கெட்டதுவே துறவு என்று அறிதி மாணாக்கனே.

(வி-ரை.) “அறிந்தழுந்தி யென்றதனால்” பற்றி என்பது இடையே வருவிக்கப்பட்டது.

துறவு கூறினமையால் எதிராக விடயம் வருவிக்கப் பட்டது. அகத்துத் தேடியென்றது, அவ்விடயங் கிடைத்தற்கு உபாயம் நாடுதல்.

சுகங்கூறினமையால் விடயம் பிரியாது நின்றவிடத்து என்பது வருவிக்கப்பட்டது.

விடயம் பிரியாத போது அதன் மேல் விரைந்து சேறலானும், பிரிந்தபோது உளம் பதைத்தலானும், இருமைக்கும் பொதுவாய்ப் பதறி என்றார்.

“மயங்கிச்சுழல்வதனால்” போதத்தைத் தொழில் என்றார்.

இம்மை மறுமைகளினும் உயிர்க்குத் துன்பந்தருவது ஆகலின், அவ்விடயங்களைப் “பகை” என்றார்.

அறிவும் துறவும் இவை என்றறிவித்தீர், இனிச் சிவ யோகமாவது யாது எனின், மேற் கூறுகின்றார்.