அருணனு தயம்போற் றான் வீழ்வா ராசை
பெருகுவபோற் கப்பற் பிழைத்துக் – கரை காணு
மாபோற் சிறையு மரும்பிணியு நீங்கியிடு
மாபோ லதிசயம்போ லாம்.
(இ-ள்.) அருணன் உதயம் போல் தாம் வீழ்வார் ஆசை பெருகுவபோல் கப்பல் பிழைத்துக் கரைகாணும் ஆறு போல்-மழையிருளில் நெறிதெரியாது உழல்வோர்க்குச் சூரியன் உதயமானது போலும், தம்மால் விரும்பப்பட்ட மாதர்மேல் ஆசை உள்ளமும் மறைய மேன்மேல் வளர்தல் போலும், திசைதவறிய கப்பல் தப்பித்துறைசேரக் காணுமாறு போலும்;
சிறையும் அரும்பிணியும் நீங்கியிடுமாப்போல் அதிசயம்போல் ஆம்-விடாச்சிறை இருந்தோர்க்கு அச்சிறை நீங்கியவாறு போலும், மாறா நோயாளர்க்கு அந்நோய் நீங்கிய வாறுபோலும், ஓர் காலமுங் காணாத அதிசயங்கண்டது போலும், திருவருள் ஞானம் பெற்றோர்க்குத் தோற்றும்.
(வி-ரை) முன்னர் ஆணவஇருளால் பொய் இது மெய் இது என்று ஒன்றும் தோன்றாதிருந்தோர்க்கு இப்போது அருளொளியால் எல்லாம் சிவமாய்த் தோற்றலின், “அருணனுதயம்போல்” என்றும், அவ்வருள் ஞானத்தால் தோன்றும் ஆநந்தத்தில் தாம் மேன்மேல் மறைதலின், “தாம்வீழ்வா ராசை பெருகுவபோல்” என்றும், இந்த ஞானாந்தத்தை என்றைக்கு அடைவோம் என்று இருந்த தமக்கு இப்போது கிடைத்தலின், “கப்பல் கரைகாணுமா போல்” என்றும், முன் உடலாயிருந்த தாம் இப்போது அதற்கு உட்புறனாய் விளங்கும் சிவமாயிருத்தலின், “சிறை நீங்குமாபோல்” என்றும், முன் இருந்த பிறவித்துன்பம் இப்போது நீங்கலின், “பிணிநீங்குமாபோல்” என்றும், ஓர் காலங்களினும் கண்டறியாத காட்சியாகலின், அதிசயம்போல்” என்றும் கூறினார்.
இத்திருவெண்பாவால் பக்குவர்க்குப் பாசநீங்கி ஞானோதயமான போது தோற்றும் அதிசயகுணம் இவை என்று அறிவித்தவாறு காண்க.
பாசநீங்கி ஞானந்தோன்றினால் அவர்க்கு இக்குணங்கள் தோற்றுவது என்னை எனின், மேற்கூறுகின்றார்.