ஒழுவிலொடுக்கம்

86. உடல் பொறிக ளுட்கரணத் தோடு குணம் வாயு

உடல் பொறிக ளுட்கரணத் தோடு குணம் வாயு
விடவிடவே நாதாந்த வீடு – நடுநிலையாய்த்
தன்னொழிவும் பேரின்ப சாகரமுஞ் சந்தழிவா
ரென்னபடார் கண்டறியாரே.

(இ-ள்.) உடல் பொறிகள் உட்கரணத்தோடு குணம் வாயு விடவிடவே நாதாந்த வீடும்- உடலமும் பொறிகளும் அந்தக்கரணங்களும் அவற்றுடனே குணங்களும் பிராண வாயுவும் ஆகிய இவ்வைந்தையும் ஒன்றொன்றாய் அறிந்து நீங்க நீங்கவே வரும் நாததத்துவத்தின் முடிவாகிய விடுதலையையும்,

நடுநிலை ஆய்த்தன் ஒழிவும்பேர் இன்ப சாகரமும் சந்தழிவார் என்ன படார் கண்டு அறியாரே – அவ்விடுதலைக்கும் சுகாதீதத்திற்கும் நடுநிலையாய்த் தோன்றும் தன் தரிசனம், திருவருள் தரிசனம், பரை தரிசனம், பரையோகம், பரையோக நீக்கத்தையும், அவற்றின் மேல் தற்போத ஒழிவையும், அதன் மேல் ஆநந்தசாகரத்தையும், அநுபவமாகக் கண்டு அதன்மேல் சிவத்தோடு இரண்டற்று இருக்கின்றார் என்ன ஆச்சரியப்பட்டார் முன்னோர் காலங்களிலும் அவற்றைக் கண்டறியாதார்,

(வி-ரை.) உடலத்தை உள்ளபடி அறிந்து நீங்கவே பஞ்சபூத காரியமாகிய புறக்கருவிகள் இருபத்தைந்தும், ஏடணைத்திரையங்களும் தசநாடிகளும் நீங்கும். ஞானேந்திரியங்களை உள்ளபடி அறிந்து நீங்கவே அவற்றான் அபகரிக்கப்பட்ட சத்தாதிகள் ஐந்தும், அவ்விந்திரியங்கள் அவ்விடயங்களை அபகரித்தபோது தொழிற்படும் கன்மேந்திரியங்கள் ஐந்தும், விடயீகரிக்கப்பட்ட வசநாதிகள் ஐந்தும் இவ் விருவகை இந்திரியங்கட்கும் இடமாய்நின்ற பூதங்கள் ஐந்தும் நீங்கும். அங்கக்கரணங்களை உள்ளபடி அறிந்து நீங்கவே சூக்குமையாதி வாக்கு நான்கும் நீங்கும்.

முக்குணங்களை உள்ளபடி அறிந்து நீங்கவே இம்முக்குணாகாரமான மூலப்பிரகிருதிநீங்கும். மூலப்பிரகிருதி நீங்கவே இதாகிதங்களாய் வரும் கன்மம் சீவனமின்றி நிற்குமாதலின், அக்கன்மத்தைக் கூட்டாநின்ற காலமும் அதனை வரைந்து நிற்கின்ற நியதியும் நீங்கும். இவை நீங்கவே ஆன்மாவிற்குப் புசிப்பின்மையால் இச்சா ஞானக்கிரியை சீவியாது. ஆகலின், கிரியையை எழுப்பும் கலையும், அறிவை எழுப்பும் வித்தையும், ஆசையை எழுப்பும் இராகமும், ஆசைப்பட்ட பதார்த்தத்தில் மயங்கும் புருடனும் நீங்கும். இங்ஙனம் கலாதிகள் நீங்கவே காலத்தையும் நியதியையும் கலையையும் பிரேரித்த சத்திதத்துவமும், வித்தையைப் பிரேரித்த சுத்தவித்தையும், இராகத்தைப் பிரேரித்த ஈச்சுரதத்துவமும், புருடனைப் பிரேரித்த சிவதத்துவமும், மூலப்பிரகிருதியைப் பிரேரித்த சாதாக்கிய தத்துவமும் நீங்கும்.

இங்ஙனம் சுத்ததத்துவங்கள் நீங்கவே பிராணவாயு மாத்திரம் இயங்கும். இப்பிராணவாயுவை உள்ளபடி அறிந்து நீங்கவே தசவாயுக்களும் அசபைநாதமும் நீங்கும். இம்முறையே தத்துவம் தொண்ணூற்றாறும் நீங்கும். ஆகலின், ”விடவிடவே நாதாந்த வீடும் ” என்றார்.

“நடுநிலையாய்” என்றதனானும், “பேரின்பசாகரமும்” என்றதனானும், தற்றரிசன முதலிய வருவிக்கப்பட்டன.

கண்டத்தானத்தில் அந்தக்கரணங்களோடும் கூடி மத்திமை வாக்கு நன்றாய் அறியப்படுதலின், மத்திமைவாக்குக்குக் காரணமாகிய சூக்குமை பைசந்தியும், மத்திமையால் காரியப்பட்ட வைகரியும், அந்தக்கரணங்கள் நீங்கவே நீங்கும் ஆகலின், அந்தக்கரணங்களை நீங்கவே சூக்குமையாதி வாக்குகள் நீங்கும் என்று சொல்லப்பட்டது.

பிராணவாயு இயக்கத்தை அடக்கத்தொடங்கின் அடங்காது மேன்மேலியங்கும் ஆகலின் அவ்வியக்கம் தன்னால் அறியப்படுதலானும், தன்னை அஃது அறியாமையானும், அதனைச்சடம் என்றும், அதனை அறிந்த அறிவு தான் என்றும், தனக்கறிவித்தது திருவருளென்றும் அறிந்து தான் திருவருள் நாட்டத்தில் நிற்கவே அது நீங்கும் எனக்கொள்க.

ஏ – ஈற்றசை.

“கண்டறியாரே” என்றதனால், இப்போது கண்டென்பது வருவிக்கப்பட்டது.

உடல் பொறிகரண முதலிய கருவிகளை உள்ளபடி அறிந்து நீங்குதலை, ஐம்புலனாலா மந்தக்கரண, முக்குண மிருவளி யொருங்கிய வானோ ரேத்த நின்றனை” என்னும் திருவெழுகூற்றிருக்கையாற் காண்க.

இத்திருவெண்பாவால் முன் ஓர் காலங்களினும் கண்டறியார் ஆகலின், இப்போது அக்குணங்கள் அவர்க்குத் தோற்றுமென்று அறிவித்தவாறு காண்க. இங்ஙனம் ஞானத்தால் பாசத்தை நீங்கிப் பதியை அடைந்தோரை மீட்டும் அப்பாசம் மயக்காதோ எனின், மேற்கூறுகின்றார்.