ஒழுவிலொடுக்கம்

87. அறிவுமறி வானு மறியா மலையு

அறிவுமறி வானு மறியா மலையு
மறியிற் றடையே தவர்க்குப் – பிறிவரோ
வாகாயஞ் சூறைகொளி லஞ்சி யடுக்களைக்குட்
போகாது போலாம் பொருள்.

(இ-ள்.) அறிவும் அறிவானும் அறியா மலையும் அறியின் தடை ஏது அவர்க்குப் பிறிவரோ – உயிர்க்குயிராய் உள்ளும்புறம்பும் ஓரணுவளவேனும் விட்டு நீங்காதிருந்து அறிவிக்கும் அறிவாகிய பதியையும், தற்சுதந்தரமாய் ஒன்றினையுமறியாது அப்பதி அறிவிக்க அறிவதாகிய பசுவையும், இங்ஙனம் அறியும் பசுவிற்குத் தன்னையும் தனக்கறிவிக்கும் பதியையும் அறியவொட்டாது மறைந்திருந்த அறியாமையாகிய பாசத்தையும், அப்பதியால் உள்ளபடி அறியின், அவர்க்கு முன் போலும் தடை யாது? அஃதன்றி, அப்பதியை ஓர் கணமேனும் பிரிவரோ? (ஆனால் அப்பதியை அவர் பிரியாது நாடிக்கொண்டு நிற்பரோ எனின்),

ஆகாயம் சூறைகொளில் அஞ்சி அடுக்களைக்குள் போகாதுபோல் ஆம் பொருள் – எல்லாப் பொருள்கட்கும் இடங்கொடுத்திருந்த ஆகாயந்தானே அப்பொருள்களைக் கொள்ளை கொள்ளும் எனின், அதற்கு அஞ்சி அடுக்களை வீட்டில் புகுந்தொளிக்கக்கூடாது; அதுபோல், அவ்வாகாய முதலிய எப்பொருள் கட்கும் ஆதாரமாகியிருந்துள்ள மெய்ப்பொருள் தன்னை அறிந்தோர்க்கு இடம் வேறின்மையான் அவரை விழுங்கிக்கொள்வதாம்.

(வி-ரை.) பாசத்தை அறியும் போது முப்பத்தாறு கருவிகளையும் இஃது ஈதென்று அறிந்து சென்று அவற்றின் முடிவில் நின்ற தன்னால் அவை அறியப்படலானும், தன்னை அவை அறியாமையானும், தனக்கு அந்நியமென்றும் சடமென்றும் அறியப்படும். தன்னை அறியும்போது அக்கருவிகளை எல்லாம் அறிந்து அவற்றை நீங்கி நின்ற அறிவு தான் என்றும், திருவருளால் அன்றித்தற்சுதந்திரமாய் அறிவதிலன் என்றும், தான் கருவிகளோடு கூடிய போது அவை மயமாயும் அவற்றை நீங்கித் திருவருளோடு கூடியபோது இதன்மயமாயும் இருத்தலின், தான் பாச அறிவும் அன்று, பதி அறிவும் அன்று என்று அறியப்படும்.

பதியை அறியும்போது பெத்தமுத்தி காலத்தினும் தன்னை விட்டு நீங்காதிருப்பதென்றும், தனக்கு அறிவிப்பதென்றும், பாசத்தைப் பிரேரகம் பண்ணுவதென்றும், ஞானாநந்த சொரூபமென்றும் அறியப்படும்.

இங்ஙனம் நடு நின்று அறிந்த பசு பாசத்தை நீங்கிப் பரிபூரணமாகிய பதியை அடைந்து அப்பூரணமெல்லாந்தானாயிருத்தலின், “அறியிற் றடையே தவர்க்கு” என்றும், பிரிதற்கு ஏதுவாயபோதம் இறத்தலின், “பிறிவரோ” என்றும், இங்ஙனம் பிரியாதிருந்தோரை மெய்ப்பொருள் தன்மயமாய்க் கோடலின் , ” அடுக்களைக்குட் போகாது போலாம் பொருள்” என்றுங் கூறினார்.