ஒழுவிலொடுக்கம்

101. குறங்குகுத்திக்கொண்டு குறோக்கை கத்திக்கூட்டை

குறங்குகுத்திக்கொண்டு குறோக்கை கத்திக்கூட்டை
மறந்தழைத்தாற் றூக்கம் வருமோ – வெறுங்கெடுவீர்
தன்னை யழித்தெழுந்த சச்சிதா நந்தத்தை
யுன்னி லொளித்துவிடா தோ.

இ-ள். குறங்கு குத்திக்கொண்டு குறோக்கை கத்திக் கூட்டை மறந்து அழைத்தால் தூக்கம் வருமோ – பாயலில் படுத்துக்கொண்டு, துடையைக் குத்திக்கொண்டு, குறோக்கை விட்டுக்கொண்டு, உடம்பை மறந்ததாகப் பாவித்துக் கொண்டு, தூக்கமே! நீ வாராய் என்று அழைத்தால், அத்தூக்கம் அங்ஙனம் நினைத்துச் செய்யும் நினைவை அழித்தெழும் கேவலம் வந்தாலன்றி வருமோ? அதுபோலும், உன் போதத்தால் பிராணவாயுவை மறித்து நீ செய்யும் யோகத்தால் ஆனந்த நித்திரையை வரச்சொன்னால், அந்நித்திரை அப்போதத்தை அழித்தெழாநின்ற அருட்கேவலம் வந்தாலன்றி வருமோ? (அவ்வருட்கேவலம் எங்ஙனம் வரும் எனின்),

வெறுங்கெடுவீர் தன்னை அழித்து எழுந்த சச்சிதாநந்தத்தை உன்னில் ஒளித்து விடாதோ- அந்தோ! வெறுங் கெடுவீர்! தற்போதத்தை ஒழித்துத் தானாயிருக்கும் சச்சிதானந்த வடிவாகிய சிவத்தை உன்போதத்தால் உன்னில் உன்னையறியாது உனக்குள் ஒளித்துத் தன்னைவிட உன்னை ஒரு முதலாகிப் பிரித்து விடும்; ஆகலின், உனது உயிர்க்குள் இருந்து அறிவிக்கும் பூரணம் எனக்காண்டி.

(வி-ரை.) சுபாவ நித்திரைபண்ணுவோன் செயலெல்லாங் காட்டி நித்திரைபண்ணா திருந்தானைப்போல், ஏகாந்தத்து இருத்தல் ஆதனங்கட்டல் அசைவற இருத்தல் முதலிய ஞானிகள் நடையைக் காட்டி, அவரைப்போலும் ஆநந்தநித்திரை பண்ணாது தற்போதத்தோடும் இருத்தலின், இங்ஙனம் உவமை கூறினார்.

“உபதேசப்பித்தோ ” என்னும் திருவெண்பா முதல் இவை மூன்று திருவெண்பாவானும் திருவருளை அறிதற்கும், தற்போதம் ஒழித்தற்கும் உபாயம் யாது கூறினும் தெளிந்து கொள்ளாத யோகியைப்பார்த்து வெறுத்துப் போதத்தை அறிந்து அடக்கினாலன்றிக் கருவிகள் அடங்காது என்பதும் அப்போதத்தைப் பின்னிட்டு அருளை முன்னிட்டுச் செல்லவேண்டும் என்பதும், அவ்வருளை முன்னிட்டுச் சென்றபோதும் அதனைத் தற்போதத்தால் எதிரிட்டுப் பார்க்கலாகாது என்பதும் அறிவித்தவாறு காண்க.

நீர் கூறியவாறே யோகியரும், சிவம் -வாக்கு மனாதீத கோசரம் என்று கூற நீர் அவரை மறுப்பதென்னை எனின், மேற்கூறுகின்றார்.