மனவாக்குக் காயத்தான் மாய்ந்தளவை மாண்ட
தெனவாய்ப்பறையறையிலென்னா – நினைவதெலாஞ்
சாக்கிரப்பொய் தானுந் தனியனல தற்பரமு
நீக்கமற்ற பூரணமென் னில்.
(இ-ள்.) மனம் வாக்குக் காயத்தால் மாய்ந்து அளவை மாண்டது என வாய்ப்பறை அறையில் என் ஆம் நினைவது எலாம் சாக்கிரப்பொய்-மனம் வாக்குக் காயத்தால் வருந்தி யோக சமாதி கூடிச் சிவத்தைப் பெறாது, அம்மனம் வாக்குக் காயங்களால் அளவிடப்பட்ட அளவைகளை எல்லாங்கடந்தது அச்சிவம் எனப் பிறர்க்கு வாய்ப்பறை அறைந்து கூறிய ஆற்றான், அவர்க்குப் பயனென்னை உண்டாம்? அவர் பாவிப்பதெல்லாம் சாக்கிரப்பொய்யாகலின்,
தானும் தனியன் அவன் தற்பரமும் நீக்கம் அற்ற பூரணம் என்னில் – ஆன்மாவும் சிவத்தைவிட ஓர் தனிமுதல்வன் அல்லன் என்றும், அச்சிவமும் ஆன்மாவை விட்டு நீங்காது உட்புறம்பாய் நிறைந்துள்ள பரிபூரணம் என்றும் வேதாகமங்கள் கூறும் எனின்.
(வி-ரை.) கூறும் எனின், பொய்யாகலின், பயனென்னை உண்டாம் என முடித்துக்கொள்க.
மனத்தால் வருந்துவது வாயுவை உள்மறித்தல், வாக்கால் வருந்துவது சாத்திரம் பார்த்தல்; காயத்தால் வருந்துவது ஆதனங்கட்டல் ஔடதம் புசித்தல் முதலியன.
அளவை என்பது காட்சி அநுமானம், ஆகமம் முதலியன. அவ்வளவை மாண்டது ஆன்மாவும் சிவமும் இரண்டற்றிருந்த இடம். அதனை அறியாது மானதக்காட்சியில் நின்று அளவை மாண்டது என்றமையால், “வாய்ப்பறை யறையிலென்னாம்” என்றார்
இத்திருவெண்பாவால் அவர் அங்ஙனம் கூறினாராயினும் மனாதிகளைக் கடந்து நின்ற பூரணத்தை உணர்ந்தவர் அலர் என்று அறிவித்தவாறு காண்க.