ஒழுவிலொடுக்கம்

103. வாயுமனங் கண்ணசையா வாறடக்கி மக்கினமாய்

வாயுமனங் கண்ணசையா வாறடக்கி மக்கினமாய்
நீபுதைத்து போய்க்கூட னீதியோ – காயத்துக்
குட்புறம்பாய் நீதானா யுண்டில்லை யாயதற்கு
மப்புறமாய்த் தாக்கற் றதை.

(இ-ள்.) வாயு மனம் கண் அசையா ஆறு அடக்கி மக்கினம் ஆய் நீ புதைந்து போய்க் கூடல் நீதியோ- வாயுவும் மனமும் கண்ணும் சிறிதும் அசையாவாறு அடக்கி, அங்ஙனம் அடக்கிய போதமும் தோன்றாது அவற்றுள் மறைந்து, நீ சென்று அடையத்தொடங்குதல் முறைமையோ?

காயத்துக்கு உள் புறம்பு ஆய் நீதான் ஆய் உண்டு இல்லை ஆய் அதற்கும் அப்புறம் ஆய் தாக்கு அற்றதை – வறுங்கடத்திருந்த ஆகாயம் போன்று இக்காயத்திற்கு உள்ளும் புறம்புமாய், நீ அருள் தானாகிய காலத்து உண்டென்றும் இல்லையென்றும் சொல்லப்பட்ட அநுபவமாய் அதற்கும் அப்பாலாய் ஒன்றோடும் தாக்கற்றிருந்த சிவத்தை,

(வி-ரை.) ஆன்மா அருள் வயப்பட்டபோதெல்லாம் அவ்வருள் வடிவாய்த் தோற்றலான், “உண்டு” என்றும், அங்ஙனந் தோற்றிய அருளை இன்னபிரகாரமாய் இருக்கின்றது என்று சொல்லக்கூடாமையான், இல்லையாய் என்றும், அதனையுங்கழன்று சுகாதீதப்படுதலின், “அதற்கும் அப்புறமாய்” என்றும் கூறினார்.

இத்திருவெண்பாவால் பூரணத்தை அடைதற்கு ஈது உபாயம் அன்றென்று அறிவித்தவாறு காண்க.