ஒட்டா திருக்கவென்றா லொட்டா துறக்கமாஞ்
சுட்டா திருக்கிற் சுடர்க்கொழுந்தாந் – துட்ட
மனத்தோடு வாயுவை நீர் மண்டையிலே வைக்க
நினைப்பீரி தென்ன நிலை
(இ-ள்.) ஒட்டாது இருக்க என்றால் ஒட்டாது உறக்கம் ஆம் சுட்டாது இருக்கின் சுடர்க்கொழுந்து ஆம்- உமது யோகத்தால் கருவிகள் ஒன்றும் தாக்காது ஒழிந்திருப்போம் என்று நீர் கருதினால், அக்கருவிகள் ஒழிந்தபடி நிற்கவொட்டாது கேவலம் வந்து சாரும், அக்கருவிகள் ஒன்றையும் எதிரிடாது பார்த்திருப்போம் எனில் ஆண்டு ஓர் ஒளிதோற்றும், (மனத்தால் வாயுவை அடக்கி நிற்பின் அங்கனமாம் எனின்),
துட்ட மனத்தோடு வாயுவை நீர் மண்டையிலே வைக்க நினைப்பீர் இது என்ன நிலை-அக்கொடிய மனத்துடனே வாயுவையும் பிரமரந்திரத்தில் நிறுத்துதலே முத்தி என்று அப் பிரமரந்திரத்தில் அவற்றை நிறுத்தக் கருதுவீர்! அஃதென்ன உண்மைநிலை.
(வி-ரை.) மனத்தையும் வாயுவையும் பிரமரந்திரத்தில் நிறுத்தினால் கருவிகளெல்லாம் ஒழியும், அவை ஒழியவே கேவலம் மூடும்; அது மூடவே தம்மோடு தமக்குள் இருந்து அறிவிக்கும் திருவருளும் தெரியாது; ஆகலின், அந்நிலைமை ”ஈதென்ன நிலை” என்றார்.
இத்திருவெண்பாவால் யோகியரது கருத்தை எடுத்துக்காட்டி, இங்ஙனம் நிற்பின் அங்ஙனம் தோற்றும் எனின், எங்ஙனம் நிலையைப் பெறுவீர் என்று அவரை மறுத்தவாறு காண்க.
வாயுவைவிட்டு மனத்தை மாத்திரம் நிறுத்தினால் சிவத்தைப் பெறலாமோ எனின், மேற்கூறுகின்றார்.