ஒழுவிலொடுக்கம்

108. நீர்க்குப் பதமு நெருப்புச் சுடுந்தொழிலுங்

நீர்க்குப் பதமு நெருப்புச் சுடுந்தொழிலுங்
காற்றைச் சலிக்கவுமார் கற்பித்தா – ரார்க்குமிது
போகா மனாதி புதைக்குநிழல் போலாநீ
யாகாயம் போற்பா ரறும்.

(இ-ள்.) நீர்க்குப்பதமும் நெருப்புச் சுடும் தொழிலும் காற்றைச் சலிக்கவும் ஆர் கற்பித்தார் ஆர்க்கும் இது மனாதி போகா-நீர்க்குக் குளிர்ந்து பதஞ்செய்யும் குணமும், நெருப்பிற்குச் சுட்டு ஒன்றுவிக்கும் குணமும், காற்றிற்குச் சலித்துத் திரட்டும் குணமும் கற்பித்தார் யாவர்? அவற்றிற்கு இக்குணங்கள் இயல்பான வாறுபோல், மனத்திற்கு ஓர் பொருளைப் பற்றும் குணமும், புத்திக்கு அது பற்றிய பொருளை நிச்சயிக்கும் குணமும், அகங்காரத்திற்கு அது நிச்சயித்த பொருளை அபிமானிக்கும் குணமும், சித்தத்துக்கு அஃது அபிமானித்த பொருளைச் சிந்திக்கும் குணமும் இயல்பாம். ஆகலின், யாவர்க்கும் இம்மனமாதி அந்தக்கரணங்கள் நீங்கா. (ஆயின் நீர் இங்ஙனங் கூறிய ஆற்றான் அக்கரணங்கள் அங்ஙனம் இருப்பன அன்றி அவற்றை நீக்க வேண்டாவோ எனின்),

புதைக்கும் நிழல் போல் ஆம் நீ ஆகாயம்போல் பார் அறும் தன்னைப் புதைக்க மண்போடுந்தோறும் அம்மண்மீது மேன்மேல் எழப்பட்ட புதைக்கும் நிழல்போலும் அக்கரணங்களை உன் போதத்தால் அடக்குந் தோறும் இப்போதத்தின் மீது மேன்மேல் எழுவதாம்; ஆகலின், உனது உயிருள் பிரிவற்றிருந்த அருளை, உட்புறனாய் ஒன்றோடும் தாக்கற்றிருந்த ஆகாயம்போல், அவ்வருள் ஞானக் கண்ணால் தேகாதி பிரபஞ்சங்களை எல்லாம் உட்புறனாய் நிரந்தரமாய்ப் பார்; இங்ஙனம் பார்த்தபோது அக்கரணங்கள் அறும்.

(வி-ரை.) இதனால் அந்தக்கரணம் பொறிவழிச் சென்று பிரபஞ்சத்தை நாடும்பொழுதும், அங்ஙனம் செல்லாவிடத்து அவ்வாசனையால் உள்ளே அசையும்போதும், தற்போதத்தால் அடக்கின் அடங்காது மேன்மேல் எழும். ஆகலின், புறம்பும் உள்ளும் திருவருளைப் பரிபூரணமாய்க் காணின் அக்கரணங்கள் அடங்கும் என்பதாயிற்று.

நீராதி இயற்கைக் குணங்களைப் போதத்தால் அடக்கக் கூடாதது போல், மனாதி இயற்கைக் குணங்களையும் இதனால் அடக்கக் கூடாதென்பது காண்க.

இத்திருவெண்பாவால் திருவருளை உள்ளும் புறனும் பரிபூரணமாய்ப் பாவித்தாற் கரணம் அடங்குமென்று அறிவித்தவாறு காண்க. இங்ஙனம் உள்ளும் புறனும் பரிபூரணமாய்ப் பாவிப்பது அருளன்றோ எனின், மேற்கூறுகின்றார்.