மண்ணை மலையை மறிகடலை வானகத்தை
யெண்ணி லளந்தறிய வெய்துமோ – வுண்மையை நீ
யுண்டென்னி லோர் வார்த்தை யுண்டல்லா துன்னொழிவைக்
கண்டறியி லன்னியமாங் காண்.
(இ-ள்.) மண்ணை மலையை மறிகடலை வானகத்தை எண்ணில் அளந்து அறிய எய்துமோ – மண்ணக முழுதையும் வானக முழுதையும் நீட்டல் அளவையானும், மலையை எடுத்தல் அளவையானும், மறிகடலை முகத்தல் அளவையானும் எண்ணுமிடத்து ஒருவரால் இவ்வளவென்று அளவிட்டு அறியக் கூடுமோ? அதுபோல்,
உண்மையை நீ உண்டு என்னில் ஓர் வார்த்தை உண்டு அல்லாது உன் ஒழிவைக்கண்டு அறியில் அன்னியம் ஆம் – இருநூற்றிருபத்துநாலு புவனங்கட்கும் அவற்றுள் இருந்த சர அசர உயிர்கட்கும் உள்ளும் புறம்புமாய் நிறைந்துள்ள திருவருளை நீ உண்டென்று சொற்றி எனின், அவ்வோர் சொல்லும் உண்டாவது அன்றி இச்சொல்லுக்குப்பொருள் இது என்று உன் போதத்தால் இதனது நாசத்தில் தோற்றும் அவ்வருளைக்கண்டு அளவிட்டு அறியக்கூடுமோ? அங்ஙனம் அன்று அளவிட்டறிவேன் எனில், உனக்கு அநந்நியமாய் இருந்த அவ்வருள் அந்நியமாய் நீங்கும்.
(வி-ரை.) இதனால் போதத்தாற் சிறிது அளவிடப்படும் மண்ணாதி பொய்ப்பொருளையே முற்றும் அளவிடக்கூடாது எனின், அப்போத நாசத்திருந்த மெய்ப்பொருளை எங்ஙனம் அளவிடக்கூடும் என்பதாயிற்று. அருள் அநந்நியமாயிருந்துள்ள தாயினும், போதந் தடித்தபோது மலவாசனை தோன்றும், இம்மலவாசனையோடுங் கூடிய போதத்திற்கு மலரகிதமாயிருந்துள்ள அவ்வருள் தோற்றாது ஆகலின், “அன்னியமாங்காண்” என்றார். காண் – அசை.
இத்திருவெண்பாவால் அருளை எதிரிட்டு அறியின் அந்நியமாம் என்று அறிவித்தவாறு காண்க.