ஒழுவிலொடுக்கம்

110. உதித்தொடுங்கும் பொய்க்கா ருபாதான மென்னா

உதித்தொடுங்கும் பொய்க்கா ருபாதான மென்னா
துதிப்பை யுதிப்பா லொடுக்கிற் – பதைத்தெழுந்த
பந்தன்றோ சாட்சியைப் போற் பார்வேர் பறித்தமரங்
கொந்தலர்ந்து காயாதொக்கும்.

(இ-ள்.) உதித்து ஒடுங்கும் பொய்கார் உபாதானம் என்னாது உதிப்பை உதிப்பால் ஒடுக்கின் பதைத்து எழுந்த பந்து அன்றோ சாட்சியைப்போல் பார் – ஆகாயத்தில் தோன்றி மறையும் கார்போல், மாயையில் தோன்றி ஒடுங்கும் பொய்யாகிய கரணங்களையும், அம்மாயை என்று அருளால் கண்டு நீக்காது, அதனை மெய்போல் கருதி அக்கரணங்களைப் போதத்தால் அடக்கில், அவைகரத்தால் அறையுந்தோறும் விரைந்தெழுந்த பந்து போல் ஆகாவோ? அப்பந்தைக் கரத்தால் அறையாது விடுத்தால் நிலத்திற்கிடக்கு மாகலின், இதன் சாட்சியைப்போல் உன் போதத்தால் அவற்றை அடக்கின் மேன் மேலெழும் என்பதையும் பார்த்தறிதி; (அஃதன்றியும்),

வேர் பறித்த மரம் கொந்து அலர்ந்து காயாது ஒக்கும் – நிலத்தில் ஊன்றிய முதல்வேர் பறித்தமரம் பூத்துக் காயாது, அதுபோலும் உன் போதம் அற்றபோது கரண இந்திரியங்கள் ஒன்றும் தோன்றாது அறும்.

(வி-ரை.) உபாதானம் என்றது மாயையை; அது காரியத்தைக் காரணமாகக் கூறியது.

காரணம்போல் தோன்றி மறைதலின், போதத்தையும் “உதிப்பு ” என்றார்.

கரணங்கள் போதம் இருந்தபோது இருந்தும், இழந்தபோது இறந்தும் வருதலின், போதத்தை வேர்க்கு உவமையாகக் கூறினார்.

இத்திருவெண்பாவால் அருளால் கருவிகளினது உண்மையை அறிந்து நீக்கினால் நீங்கும் என்பதும், போதத்தால் அடக்கின் மேன்மேலும் எழும் என்பதும், கருவிகளை நியதிகளைந்து தற்போதத்தையும் அடக்கினால் மீட்டும் கருவிகள் தோற்றா என்பதும் அறிவித்தவாறு காண்க.

இங்ஙனம் கருவிகளும் போதமும் இறந்து நின்ற இடத்து வரும் இலாபம் என்னை எனின், மேற்கூறுகின்றார்.