ஒழுவிலொடுக்கம்

122. தத்துவத்தை யெல்லாஞ் சடமென்று தாக்கற்றுச்

திருச்சிற்றம்பலம்

நான்காம் அதிகாரம்

கிரியைக்கழற்றி

தத்துவத்தை யெல்லாஞ் சடமென்று தாக்கற்றுச்
செத்தசத்தின் கண்போற் றிரியாது – வைத்தெடுத்தும்
பூரணமே யென்றழைத்துந் தேடிப் புரண்டழுதுங்
கோரணிகாட்டும் பேய்க்குவால்.

(இ-ள்.) தத்துவத்தை எல்லாம் சடம் என்று தாக்கு அற்றுச் செத்த அசத்தின் கண்போல் திரியாது – தத்துவங்களை எல்லாம் இது இது என்று தன்னால் அறியப்படலானும், தன்னை அவை அறியாமையானும், அவற்றைச் சடமென்று அறிந்து அவைகள் ஒன்றோடும் தாக்கற்றுச் செத்த ஆட்டுக்கண்போல் சுட்டறிவு கெட்டுச் சும்மாய்த் திரியாமல்,

வைத்து எடுத்தும் பூரணமே என்று அழைத்தும் தேடிப்புரண்டு அழுதும் கோரணி காட்டும் பேய்க்குவால் – தற்போத நாசத்து இருந்த பூரணசிவத்தை அப்போதத்தால் ஓர் வடிவில் ஆவாகனம் பண்ணி, அதனை மீட்டும் தியானம்பண்ணி, இங்ஙனம் பூசனை புரிந்தும், அவ்வடிவைப் பரிபூரண சொரூபமே என்று ஓலமிட்டழைத்தும், அச்சிவம் எங்கணும் இல்லை மகாதலங்களில் உண்டென்று கருதி அத்தலங்களில் தேடிச்சென்றும், நிலத்தில் வீழ்ந்து புரண்டழுதும், இங்ஙனம் கிரியையாளரென்னும் பேய்க் கூட்டங்கள் கோரணிக் கூத்தாடிக்காட்டும்.

(வி-ரை.) “செத்தசத்தின்கண்” உயிர் அசத்தின்கண் போல் இருப்பினும் இதனது சுட்டறிவு அதற்கு இன்மை போல், மெய்ஞ்ஞானிகள் பிரபஞ்சிகள்போல் இருப்பினும், இவரது சுட்டறிவு அவர்க்கு இன்றி இருப்பர். அவர்போல் நீரும் இராது என்னை செய்கின்றீர் என்று அவரது நடையை இவர்க்கு அறிவிக்கவேண்டி, அந்நடையின்றிய இவரைப்பார்த்து, “செத்தசத்தின் கண்போற்றிரியாது” என்றார்.

சுட்டறிவு கெட்டு நிற்பது அருள், சுட்டச்செய்வது மருள் ஆகலின், இவரைப் “பேய்க்குவால்” என்றும், இவர் தொழிலைக் கோரணிக்கூத்து” என்றும், இவர்க்கு ஆன்மலாபம் இன்மையால், பிறர்க்குக் காட்டும்” என்றுங் கூறினார்.

இத்திருவெண்பாவால் கிரியையாளரைப் பார்த்து ஞானிகள் நடையை எடுத்துக்காட்டி, இவரைப்போல் நீரும் செய்யாது என் செய்கின்றீர் என்று இகழ்ந்து கூறியவாறு காண்க.