கிரியைக் கிளைத்து வந்து கேட்டவர்க்குச் சும்மா
திரியச் சுகம்விளைத்த சீமான் – குருவன்றிச்
சற்றே பதைப்பத் தரினுஞ் சகம்படைக்கக்
கற்றானுங் காலனுமாங் காண்.
(இ-ள்.) கிரியைக்கு இளைத்து வந்து கேட்டவர்க்குச் சும்மா திரியச் சுகம் விளைத்த சீமான் குரு அன்றி- மனத்தால் பாவிக்கும் தொழிலும், வாக்கால் தோத்திரம் பண்ணும் தொழிலும், காயத்தால் அருச்சனையாதி செய்யும் தொழிலும் ஆகிய இக்கிரியைகளால் மிகவும் மெலிந்து இவற்றை வெறுத்து, ஞானத்தை விரும்பி வந்தடைந்து கேட்ட அதிபக்குவர்க்கு , இம்மனவாக்குக் காயங்கள் அசைதற்கு ஏதுவாய தற்போத அசைவை ஒழித்து அருள் வடிவாக்கி, எனக்கு இன்னது வேண்டும் என்பது ஒன்றும் இன்றிச்சும்மா சஞ்சரிக்க வைத்துப் பேரின்பத்தை உண்டாக்கிய இவ்வாநந்தச் செல்வனே ஞானகுரு அன்றி,
சற்றே பதைப்பத்தரினும் சகம் படைக்கக்கற்றானும் காலனும் ஆம் காண்-அப்பக்குவர்க்கு ஓரணுவளவேனும் தற்போதம் அசைதற்கு ஏதுவாய உபதேசங்களைக் கொடுப்பினும், அக்குரு சகத்தைப் படைத்தற்குக் கற்றுள்ள பிரமனும், இவனால் படைத்துள்ள சகத்தில் உண்டாகிய உடல்களை அழிக்கும் காலனும் ஆவனன்றி ஞான குரு அலன் என்று அறிதி.
(வி-ரை) போதம் பதைத்தற்கு ஏதுவாகிய உபதேசங்களைக் கூறலின், சகல கேவலங்கள் நீங்கா; இவை நீங்காமையால் பிறப்பு இறப்பு உண்டாகும். ஆகலின், “சகம் படைக்கக் கற்றானுங் காலனுமாங் காண்” என்றார்.
சீவன் முத்தனாய் நிலத்திற் சஞ்சரித்தலின், “திரிய” என்றார்.
இத்திருவெண்பாவால் ஞானபக்குவனுக்கு முன்னிருந்த சரியையாதி வாதனைகளை எல்லாம் போக்கி, தற்போதம் பதையாது மௌனமாயிருக்கும்படி போதிப்பவனே ஞானகுரு என்றும், போதஞ் சிறிதேனும் பதைப்பக் கூறுமவன் குரு அலன் என்றும் அறிவித்தவாறு காண்க.