அக்கினி தேவற் கசீர்த்தியென்று சுக்கரைத்து
வைக்கோலான் மூடி மலையடுப்பிற்-றுக்கியாய்
நீரைக் கழுவி நிழலைப் புதைத்தளப்பா
ராரைப் போல் வாரென்ன லாம்.
(இ-ள். அக்கினிதேவற்கு அசீர்த்தி என்று சுக்கு அரைத்து வைக்கோலால் மூடி மலை அடுப்பின் துக்கி ஆய்--அக்கினிதேவனுக்கு அசீரணம் பிறந்ததென்று கருதி அது போதற்குச் சுக்கரைத்துக்கொடுத்து, சீதளம் பிறந்ததென்று அவனை வைக்கோலால் மூடி அவனுக்கு முன்னரே இங்ஙனம் செய்யாதிருந்தோம் என்று மலை வந்து தம்மேல் அடுத்தது போலும் துக்கத்தை உடையவராகி,
நீரைக் கழுவி நிழலைப் புதைத்து அளப்பார் ஆரைப் போல்வார் என்னல் ஆம் – நீரை நீரால் கழுவித் தமது நிழலை மண்ணுட்புதைத்து அந்நிழலைத் தம்மடியால் அளந்து இவ்வளவு என்று அளவிடுவாரை யாவரைப்போல்வார் என்று கூறலாம்.
(வி-ரை.) எவரெவர் புசித்த புசிப்புக்களையெல்லாம் அவரவர் வயிற்றூடிருந்து சீரணிக்கப்பண்ணும் அக்கினி தேவனுக்கு அசீரணம் பிறந்ததென்று உபசரிக்கும் முறைமைபோல், உயிர்கட்கெல்லாம் உயிராயிருந்து ஊட்டி உறக்கி உபசரிக்கும் சச்சிதாநந்த ரூபமாயுள்ள சிவத்திற்கு ஓர் குறை உள்ளது போற் கருதி, அட்டவிதார்ச்சனை சோடச உபசாரங்களைச் செய்தலான், “அக்கினிதேவற் கசீர்த்தி யென்று சுக்கரைத்து வைக்கோலான் மூடி” என்றும்; இன்றைக்கு இந்நாழிகை அளவும் பூசைநைவேத்திய உபசாரங்களைச் செய்திலம் என்று மனத்தில் துயருறலால், “துக்கியாய்” என்றும்; அசுத்தத்தை யெல்லாம் சுத்தமாக்கும் நீரைக் கழுவிச் சுத்தமாக்கத் தொடங்குவான் போன்று, தன்னைச் சேர்ந்த உயிர்களினது மும்மலங்களையும் துடைத்து நின்மலமாக்கும் சிவத்தை நீராட்டி நின்மலமாக்கத் தொடங்கினாராகலின், “நீரைக்கழுவி” என்றும், புதைப்பதற்கு அகப்படா நிழலைப் புதைக்கத்தொடங்கினாற்போல் ஒன்றிற்கும் அகப்படாத பொருளைத்தற்போதத்தால் அகப்பட்டது போல் பாவித்து ஆவாகனம் பண்ணலின், “நிழலைப்புதைத்து” என்றும், தனது நிழலை அளந்து செல்லும் தோறும் அந்நிழல் கடந்து கடந்து சேறல்போல், இங்ஙனம் இருக்கும் என்று சிவத்தைத் தியானிக்குந்தோறும் அது அத்தியானங்களுக்கு அப்பால் அப்பால் சேறலின், “நிழலளப்பார்” என்றுங் கூறினார். சிவத்தினது உண்மையைக் கேட்டிருந்தும் இங்ஙனம் செய்தலான், “ஆரைப் போல்வா ரென்னலாம்” என்றார்.
இத்திருவெண்பாவால் மலரகிதமாய் ஆநந்தவடிவாயிருந்த சிவத்திற்கு மாயா காரியமாகிய நீராதி உபசாரங்களால் சுத்தமும் சுகமும் உண்டாகா என்பதும், அதனைப் போதத்தால் அளவிட்டறியக் கூடாதென்பதும் அறிவித்தவாறு காண்க.