தன்னறிவு சாட்சியல்லாற் சாயுச்சி யப்பயனைச்
சொன்ன பிழை கெட்டேன் றொலைப்பரோ – முன்னே
நடவா வழியொருவன் சொல்ல நடந்து
தடுமாறி நொந்தறியா தார்.
(இ-ள்.) தன் அறிவு சாட்சி அல்லால் சாயுச்சியப் பயனைச் சொன்ன பிழை கெட்டேன் தொலைப்பரோ- சிவாநுபவம் நன்றாய் விளங்கிற்று என்பதற்கும் அஃது இன்றென்பதற்கும் தனக்குத் தன்னறிவுதானே சாட்சியாயிருக்கவும், பயனைக்குறித்து மயக்கத்தால் அந்த அநுபவம் தனக்குண்டுபோற் காட்டிப் பிறருக்கு வீடடையும் நெறியான உபதேசப்பொருளைக் கூறிய பாவங்களைக் கெட்டேன் ! எந்தக்காலம் நீக்கிக்கொள்வரோ?
முன்னே நடவாவழி ஒருவன் சொல்ல நடந்து தடுமாறி நொந்து அறியார்- அஃதன்றியும் தாம் முன்செல்லாத ஒரூர்க்குச் செல்லுங்கால் அவ்வூரடையும் நெறியாதென்று அந்நெறிக்கண் தான் முன் நடவா ஒருவனைக்கேட்ப அவன் அதன் கட்சென்றான் போன்று நெறி அல்லாநெறி கூற , ஈது உண்மையெனக் கருதி அந்நெறிக்கட்சென்று, முன்னிருந்த ஊரும் பின்னடையும் ஊரும் அன்றி நடுவிடைத்தடுமாறி மனம் உடல் வருந்தி அறிந்தவரலர்.
(வி-ரை) ஐயன், காளி சந்நிதிகளில் அசத்தியங் கூறினார்க்கும் இம்மைக்கண்ணே துன்பம் வருதலின், பூரணசிவத்தின் சந்நிதியில் அசத்தியங்கூறிய பாவந்தொலையாது ஆகலின், “கெட்டேன் றொலைப்பரோ” என்றும், வாக்கால் கேட்டறிந்து காயத்தால் சென்றடையும் ஊர்க்குநெறி அறியா ஒருவன் நெறி கூறக்கேட்டு அதன்கட் சென்றதனான் வரும் இடர் அனுபவித்தறிந்தவர் மனத்தானுஞ்சென்று கூடுதற்கரிய வீடடையு நெறியைத் தாம் அறியாதிருந்தும் அறிந்தார்போன்று பிறர்க்குக் கூறார் ஆகலின்,இங்ஙனம் உவமித்துங்கூறினார்.
செறலின்கண் ‘தம்’ என்னும் பன்மை ‘தன்’ என்னும் ஒருமையாய் வந்தது.
”அல்லால்’ என்பதை மயக்கத்தா லெனக்கொள்க. ”முன்னே” என்பதை இரண்டிடத்துங் கூட்டுக.
“கெட்டேன்” என்பது இரக்கக் குறிப்பின்கண் வந்தவழக்கச்சொல்,
இத்திருவெண்பாவால் சாத்தியனே அன்றி சாதகன் ஞானோபதேசம் பண்ணுதல் குற்றமென்று அறிவித்தவாறு காண்க.