ஒழுவிலொடுக்கம்

192. சாத்துவித மெட்டாய்த் தசவவத்தை யாய்த்தன்னை

சாத்துவித மெட்டாய்த் தசவவத்தை யாய்த்தன்னை
நீத்தவனாய்த் தானாய்ப்பின் னேயமாய்க்-கூர்த்ததெல்லாஞ்
சுத்த வவத்தைத் துவட்சித் துகளற்ற
வத்துவிதர்க் கேதுமுதியா.

(இ-ள்.) சாத்துவிதம் எட்டு ஆய்த் தச அவத்தை ஆய் தன்னை நீத்தவன் ஆய்த் தான் ஆய்ப் பின் நேயம் ஆய்க் கூர்த்தது எல்லாம் சுத்த அவத்தைத் துவட்சி -இராசத தாமத காரியங்களை யெல்லாம் நீக்கிச் சாத்துவிககாரிய மாகிய நிராசை முதலிய எண் குணங்களையும் உடையவனாகி, அருகிய நோக்க முதலிய பத்தவத்தைகளையும் உடையவனாகி, இந்த நற்குணங்களால் தத்துவ முப்பத்தாறையும் கடந்து தன்னை அறிந்து அருளைத் தரிசித்துத் தற்போதம் அடங்கினவனாகி, பின்னர்ப் பரையே தானாகி, பின்னர் நேயத்தழுந்தினோனாகி, இங்ஙனம் ஒருவன் நுண்ணியதாய் அறிந்து சென்றதெல்லாம் சுத்தாவத்தை அநுபவங்களாகும்

துகள் அற்ற அத்துவிதர்க்கு ஏதும் உதியா – இந்தச் சுத்தாவத்தைகளை அறிந்து சென்ற போதம் அற்றுச் சிவத்தோடும் இரண்டறக்கலந்த அத்துவிதத்தை உடையோர்க்கு முற்கூறிய அநுபவங்களுள் யாதொன்றேனும் தோன்றாது; (இவர் மௌனாந்தமா யிருப்பர்.)

(வி-ரை.) சாத்துவிகம் எட்டாவன : நிராசை, தவம், பொறுமை, கிருபை, சந்தோஷம், வாய்மை, அறிவுடைமை, அடக்கம் உடைமை இவை எண் வகையும் எனக் கொள்க

தச அவத்தையாவன : பிரபஞ்சத்தை மாயாவடிவமாய்க் காணாது அருள் வடிவாய்க் காணும் அருகிய நோக்கமும், கருவிகளை நியதிகளையும் சிந்தனையும், முற்பிறவியிற் பட்ட துன்பங்களை நினைத்து நெட்டுயிர்ப் பெறிதலும், திருவருள் மேலீட்டால் உடம்பில் இளஞ்சூடெழுதலும், ஊணாதிகளைத் துறத்தலும், ஒருவரோடு உரையாடற்கு மானமுறுதலும், மௌனமாயிருத்தலும், பித்தேறினாற்போலப்பிரபஞ்சப் பகுப்புத் தோன்றா திருத்தலும், பிராணவாயு இறந்து மூர்ச்சித்திருத்தலும், போதம் இறந்து நிற்றலும் ஆகிய இவை பத்து மெனக்கொள்க.

சுத்தாவத்தைகளோடுங் கூடி அவற்றில் தோன்றும் அநுபவங்களைப் போதம் சுருங்கி நின்று அறிதலானும், அப்போதம் தேய்தல் வளர்தற்குத் தக்கதாய் ஓர்கால் உயர்ந்த அநுபவமாயும், ஓர்கால் தாழ்ந்த அநுபவமாயும், மாறித் தோன்றலானும், “துவட்சி ” என்றார்.

கேவலாவத்தையோடு ஆணவம் நீங்கிற்று ஆயினும், அதனது காரணம் போத மிறக்குமளவும் இருத்தலின், “போதத்தைத் துகள் ” என்றார்.

இத்திருவெண்பாவால் ஞானசாதகர் இலக்கணமும் சாத்தியரது இலக்கணமுங் கூறியவாறு காண்க.

அவ்வநுபவங்களை அறிந்து சொல்வது வாக்கு ஆகலின், இவ்வாக்கினை மௌனமாக்குவது முத்தி அன்றோ எனின், மேற் கூறுகின்றார்.