உரையொடுங்கிற் போத முதிக்கு மொழிவே
யருளா மதன் போக் கசையாப் – பரையோகம்
போனாற் சுகாதீதம் புண்ணியர்க்குப் பொய்யு தியா
தேனோர்க்குப் பல்விதமா கும்.
(இ-ள்.) உரையொடுங்கின் போதம் உதிக்கும் ஒழிவே அருள் ஆம் அதன் போக்கு அசையாப் பரையோகம் போனால் சுகாதீதம் –வாக்கினை மௌனமாக்கின் உள்ளே போதம் தோன்றும் ஆகலின், அவ்வாக்கு மௌனம் முத்தி அன்று. ஆயின், போதமடங்கின் முத்தியோ எனின் போதம் அடங்கின் அருள் தரிசனம் ஆகலின், அப்போதம் அடங்கல் முத்தியன்று . ஆயின், அருள் தரிசனம் நீங்குதல் முத்தியோ எனின் அவ்வருள் தரிசனம் நீங்கின் போதஞ் சிறிதும் அசையாத பரையோகம் ஆகலின், அவ் வருள் தரிசனம் நீங்குதல் முத்தி அன்று. ஆயின், பரை யோக நீங்குதல் முத்தியோ எனின், பரையோகம் நீங்கின் சுகப்பேறாம். ஆகலின், அப்பரையோகம் நீங்குதல் முத்தி அன்று, ஆயின், அச்சுகப்பேறு நீங்குதல் முத்தியோ எனின் அச்சுகப்பேறு நீங்குதலே சுகாதீதம் இச்சுகாதீதமே முத்திநிலை.
புண்ணியர்க்குப் பொய் உதியாது ஏனோர்க்குப் பல் விதம் ஆகும் , இச்சுகாதீத முத்தியை அடைந்த புண்ணியர்க்கு மேற்கூறிய சுத்தாவத்தையில் தோன்றும் பொய்கள் யாவும் தோன்றா , இம் முத்தியைப் பெறாது அச்சுத்தாவத்தையில் நிற்போர்க்கு அநுபவம் பலவிதமாய் தோற்றும்.
(வி-ரை.) பரையோகங் கூறி அதற்கப்பால் சுகாதீதங் கூறினமையால், இவற்றிற்கு இடையில் தோன்றும் சுகப்பேறு வருவிக்கப்பட்டது.
பரிபூரண சிவத்திற்குத் தம்மைக் கொடுத்தலால் மெய்ஞ்ஞானிகளைப் “புண்ணியர்” என்றார். சுகாதீதத்திற்குச் சுத்தாவத்தைக் காட்சி பொய்யாகலின் “பொய்யுதியாது” என்றார்.
இத்திருவெண்பாவால் முத்திநிலை ஈதென்று அறிவித்தவாறு காண்க.
அச்சுகாதீத முத்தியை அடைதற்கு ஏதுவாகிய சுத்தாவத்தையில் நிற்போரது குணங்கள் யாவை எனின், மேற் கூறுகின்றார்.